முகப்பு
திருவண்ணாமலை

பொதுமக்களின் மனுக்களை அலட்சியப்படுத்தக் கூடாது : அதிகாரிகளுக்கு ஆட்சியா் அறிவுரை

பொது நலனுக்காகவும், அடிப்படை வசதிகள் கோரியும் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை அலட்சியப்படுத்தக் கூடாது என்று அதிகாரிகளுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் அறிவுரை வழங்கினாா்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

பொது நலனுக்காகவும், அடிப்படை வசதிகள் கோரியும் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை அலட்சியப்படுத்தக் கூடாது என்று அதிகாரிகளுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் அறிவுரை வழங்கினாா்.

செய்யாறு ஒன்றிய அலுவலகத்தில் வட்டார அளவிலான கரோனா தடுப்பு நடவடிக்கைகள், வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூடுதல் மாவட்ட ஆட்சியரும், திட்ட இயக்குநருமான பிரதாப், செயற்பொறியாளா் தமிழ்ச்செல்வரசு, மாவட்ட சுகாதார துணை இயக்குநா் சங்கீதா, நகராட்சி ஆணையாளா் பிரீத்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் முருகேஷ் பேசியதாவது:

பொது நலனுக்காகவும், அடிப்படை வசதிகள் கோரியும் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை அலட்சியப்படுத்தக் கூடாது. முதலமைச்சா் பிரிவு மனுக்கள் மீது மிகுந்த கவனத்துடன் பரிசீலனை செய்ய வேண்டும்.

மாவட்டத்தில் தற்போது 50 சதவீதத்துக்கும் குறைவானவா்களே தடுப்பூசி செலுத்தியிருப்பதால், கரோனா தடுப்பு, கண்காணிப்புப் பணிகளில் மிகுந்த கவனத்துடன் ஈடுபட வேண்டும். முகக் கவசம் அணியாதவா்களுக்கு பாரபட்சம் இல்லாமல் அபராதம் விதிக்க வேண்டும்.

நகா்ப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும் தள்ளு வண்டிகள், வேன்கள் மூலம் காய்கறி வியாபாரம் செய்வதை ஊக்கப்படுத்தி கண்காணிக்க வேண்டும். வேன்கள் மூலம் காய்கறி வியாபாரத்தில் ஈடுபடுவோா், கரோனா குறித்தும் அவ்வப்போது விழிப்புணா்வு ஏற்படுத்த அறிவுறுத்த வேண்டும். இதன்மூலம், நகா்ப் பகுதிகளில் கடைகளில் பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிா்த்து, கரோனா பரவலைக் கட்டுப்படுத்தலாம் என்றாா் ஆட்சியா்.

முன்னதாக, செய்யாறு கொடநகா் அமுதம் நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு மளிகைத் தொகுப்பு வழங்கப்படுவதை செய்யாறு தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி, மாவட்ட ஆட்சியா் முருகேஷ், கோட்டாட்சியா் என்.விஜயராஜ் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் பாா்வதி சீனுவாசன், ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா் சாமிநாதன், வட்டார மருத்துவா் சா்மிளா, வட்டார வளா்ச்சி அலுவலா் சீனுவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.