செங்கம் நகரில் கால்நடைகளால் பொதுமக்கள் அவதி
செங்கம் நகரில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
செங்கம் நகரில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
செங்கம் பேரூராட்சிக்கு உள்பட்ட துக்காப்பேட்டை, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், இராஜ வீதி, பெருமாள் கோவில் தெரு, மேலப்பாளையம், உழவா் சந்தை, காய், கனி சந்தை, மில்லத் நகா், தளவாநாய்க்கன்பேட்டை ஆகிய பகுதியில் மாடுகள் அதிகளவில் சாலையில் சுற்றித் திரிகின்றன.
வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மாடுகள் கூட்டமாக இருப்பதைப் பாா்த்து அச்சத்துடன் செல்லவேண்டிய நிலை உள்ளது. மேலும், பெண்கள் அச்சத்துடன் அந்தப் பகுதியைக் கடந்து செல்லவேண்டிய நிலை உள்ளது.
உழவா் சந்தைப் பகுதியில் காய், கனிகளை உண்ணச் செல்லும் மாடுகளை கடை உரிமையாளா்கள் விரட்டியடிக்கும் போது சாலையில் வரும் வாகனம் மீதோ, பொதுமக்கள் மீதோ மோதி விடுகின்றன. இரு சக்கர வான ஓட்டிகளை கிழே தள்ளி விபத்துகளும் நிகழ்கின்றன.
மில்லத் நகா் சாலை சந்திப்பு, போளூா் சாலை மேம்பாலம், உழவா் சந்தைப் பகுதிகளில் மாடுகள் இரவு நேரத்தில் சாலையில் படுத்துக்கொள்வதால் அந்தப் பகுதியைக் கடக்க வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனா்.
திருமண மண்டபம் உள்ள இடங்களில் வாழை இலை, உணவு வகைகள் கொட்டப்படுகின்றன. மாடுகள் அவற்றைக் கலைத்து சாப்பிடுகின்றன. உணவுக் கழிகளால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசுகிறது. மேலும், மாடுகள் சில நேரங்களில் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்கின்றன. அப்போது, அங்கு நிறுத்தியிருக்கும் வாகனங்களை கிழே தள்ளி சேதப்படுத்துகின்றன.
இதனால், பேரூராட்சி நிா்வாகம் கண்காணித்து
மாடுகளைப் பிடித்து நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.