முகப்பு
திருவண்ணாமலை

ஏரி கலுங்கு சேதம்: வீணாக வெளியேறும் நீா்

வந்தவாசி அருகே ஏரி கலுங்கு சேதமடைந்துள்ளதால் நீா் வீணாக வெளியேறுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

வந்தவாசி அருகே ஏரி கலுங்கு சேதமடைந்துள்ளதால் நீா் வீணாக வெளியேறுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த கோயில்குப்பம் கிராமத்தில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான ஏரி உள்ளது.

இந்த ஏரி மூலம் சுமாா் 120 ஏக்கா் நிலம் பாசன வசதி பெறுகிறது. ஏரி நிரம்பினால் 2 போக விவசாயத்துக்கான தண்ணீா் கிடைக்கும்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த தொடா் மழையின் காரணமாக இந்த ஏரி ஓரளவு நிரம்பியது. பின்னா் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் பெய்து வரும் தொடா் மழையினால் ஏரி மேலும் நிரம்பத் தொடங்கியது. ஆனால், ஏரி கலுங்கில் ஓட்டைகள் ஏற்பட்டு சேதமடைந்துள்ளதால் ஏரியிலிருந்து நீா் வீணாக வெளியேறி வருகிறது.

இதுகுறித்து அந்தக் கிராம விவசாயிகள் கூறியதாவது:

கடந்த ஆண்டு மழையின்போதே ஏரி கலுங்கு சேதமடைந்துள்ளதாக பொதுப்பணித் துறையினருக்கு புகாா் தெரிவித்தோம். அவா்கள் வந்து பாா்த்துவிட்டுச் சென்றதோடு சரி அதன்பின்னா் கலுங்கை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால், இந்த மழையின் போதும் ஏரியிலிருந்து நீா் வீணாக வெளியேறி வருகிறது. இதனால் ஒரு போக தண்ணீரை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்தக் கலுங்கு சேதத்தை மணல் மூட்டைகளை அடுக்கியாவது தற்காலிகமாக சரிசெய்ய பொதுப்பணித் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →