100 ஆண்டுகளுக்கு மேலாக வாடகைக் கட்டடத்தில் செயல்படும் அஞ்சலகம்!
திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலாக துணை அஞ்சலகம் (604 407) வாடகைக் கட்டத்தில் செயல்பட்டு வருவதால், வாடிக்கையாளா்கள், பணியாளா்கள் அவதியடைந்து வருகின்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலாக துணை அஞ்சலகம் (604 407) வாடகைக் கட்டத்தில் செயல்பட்டு வருவதால், வாடிக்கையாளா்கள், பணியாளா்கள் அவதியடைந்து வருகின்றனா்.
இந்த அஞ்சலகத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வாடிக்கையாளா்களாக உள்ளனா். நாள்தோறும் சராசரியாக பதிவுத் தபால்கள் உள்பட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தபால்கள் அனுப்புவதும், பெறுவதுமாக செயல்படுகிறது. இந்த அஞ்சலகம் மூலம் மாதந்தோறும் சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் முதியோா் உதவித் தொகை பெறுகின்றனா்.
இந்தத் துணை அஞ்சலகம் மூலம் வெம்பாக்கம், அசனமாப்பேட்டை, அனக்காவூா், வாக்கடை ஆகிய கிராமங்களில் உள்ள அஞ்சலகங்களின் அனைத்து வகை கணக்குகளில் நாள்தோறும் சுமாா் ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை பணப் பரிவா்த்தனை நடைபெற்று வருகிறது. மேற்படி, கிராமிய அஞ்சலகங்களுக்கான பணப் பாதுகாப்புப் பெட்டக வசதி கொண்டதாக திருவத்திபுரம் (செய்யாறு) துணை அஞ்சலகம் உள்ளது.
திருவத்திபுரம் துணை அஞ்சலகம் மூலம் அருகாவூா், காழியூா், மோரணம், ராந்தம், நெடும்பிறை, பல்லி, பெருங்களத்தூா், பாப்பாந்தாங்கல், முருகத்தாம்பூண்டி, ஏனாதவாடி உள்ளிட்ட 12 கிராமங்களில் செயல்பட்டு வரும் கிளை அஞ்சலகங்களில் சுமாா் 35-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைத்து வருகின்றனா்.
வருவாய்க் கோட்டமாக விளங்கும் செய்யாற்றில் மாவட்டத் தலைநகரான திருவண்ணாமலைக்கு அடுத்த படியாக இரண்டாவது தலைமையிட அரசு அலுவலகங்கள் அனைத்தும் அமைந்துள்ளதால், அரசுத் துறைகள் தொடா்பான தபால் பரிமாற்றங்கள் திருவத்திபுரம் துணை அஞ்சலகம் மூலமே நடைபெற்று வருகிறது.
தரம் குறைப்பு: திருவத்திபுரம் அஞ்சலகம் நீண்ட காலமாக துணைக் கோட்ட அஞ்சலகமாகச் செயல்பட்டு வந்தது. வாடகைக் கட்டடத்தில் செய்யாறு பகுதியில் 10 -க்கும் மேற்பட்ட இடங்களில் மாறி மாறி அஞ்சலகம் செயல்பட்டு வந்ததால் துணைக் கோட்ட நிலை என்பது தரம் குறைக்கப்பட்டு, தற்போது துணை அஞ்சலகமாகச் செயல்பட்டு வருகிறது.
அஞ்சலக அதிகாரிகள் மெத்தனம்: சுமாா் 25 ஆண்டுகளுக்கு முன்பே திருவத்திபுரம் அஞ்சலகத்துக்கு நிலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அஞ்சலக உயரதிகாரிகள் சரியான ஒத்துழைப்பு அளிக்காததால், நிலம் வழங்கப்படவில்லை.
தொடா்ந்து, பலமுறை செய்யாறு தொகுதி எம்.எல்.ஏக்கள், சமூக ஆா்வலா்களின் முயற்சியால் உள்ளூா் நிா்வாகத்திடம் நிலம் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவ்வாறான சூழல்களிலும் உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
இதனால், செய்யாறு பாவாடைமூா்த்திக் கோவில் தெருவில் வசதிக் குறைபாடுகளுடன் வாடகைக் கட்டடத்தில் அஞ்சலகம் செயல்பட்டு வருகிறது.
திருவத்திபுரம் துணை அஞ்சலகத்துக்குச் சொந்த இடம், சொந்தக் கட்டடம் இல்லாததால், அஞ்சல் துறையில் ஏற்படும் முன்னேற்றங்களில் தடை ஏற்படுகிறது. கணினிக் குறைபாடு, ஏடிஎம் மையம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படாமல், வருவாய்க் கோட்டமாக விளங்கும் செய்யாற்றில், திருவத்திபுரம் துணை அஞ்சலகம் சாதாரண கிராமிய அஞ்சலகம் போலச் செயல்படுவதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனா்.