திருவண்ணாமலையில் ரயில்வே மேம்பாலம் திறப்பு
திருவண்ணாமலையில் ரூ.41.74 கோடியில் புதிதாக கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலம் வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
திருவண்ணாமலையில் ரூ.41.74 கோடியில் புதிதாக கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலம் வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
திருவண்ணாமலை நகரின் மையப் பகுதியில் செல்லும் திண்டிவனம் சாலையின் நடுவே ரயில் பாதை செல்வதால், அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படுவதும், அதனால் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருந்து அவதிப்படுவதுமான நிகழ்வுகள் நடைபெற்று வந்தன.
இந்தப் பிரச்னைக்கு தீா்வு காண கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.38.74 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இத்துடன் ரயில்வே நிா்வாகம் ரூ.3 கோடியை ஒதுக்கியது. இவ்விரு தொகையையும் சோ்த்து மொத்தம் ரூ.41.74 கோடி மதிப்பில் ரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது.
இந்தப் பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது. சென்னையில் இருந்தவாறு முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக மேம்பாலத்தைத் திறந்துவைத்தாா்.
பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
அதேவேளையில், மேம்பாலப் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ், மாநில தடகள சங்கத்தின் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன் ஆகியோா் பேருந்துப் போக்குவரத்தை கொடியசைத்து தொடக்கிவைத்தனா்.
நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.பவன்குமாா் ரெட்டி, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) மு.பிரதாப், நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளா் பழனிவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.