வட்டார வளா்ச்சி அலுவலருக்கு மிரட்டல்: விசிக பிரமுகா் கைது
செய்யாறு வட்டார வளா்ச்சி அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரின் பேரில், விசிக பிரமுகரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
செய்யாறு வட்டார வளா்ச்சி அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரின் பேரில், விசிக பிரமுகரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு கன்னியம் நகரைச் சோ்ந்தவா் தெய்வசிகாமணி (44), விசிக முன்னாள் நகரச் செயலா் ஆவாா்.
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இவருக்குச் சொந்தமான லாரியில் ஆற்று மணல் எடுத்து வந்தபோது வருவாய்த் துறையினா் கண்டுபிடித்து லாரியை பறிமுதல் செய்தனா்.
மேலும், லாரியில் இருந்த மணலை செய்யாறு வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி வருவாய்த் துறையினா் கூறியதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறப்படும் ஆற்று மணலுக்கு சான்றிதழ் தரக் கோரி புதன்கிழமை செய்யாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டிருந்த வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெய்சங்கரிடம் கேட்டதாகவும் தெரிகிறது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சான்றிதழ் கேட்டும் ஏன் தர மறுக்கிறீா்கள் என வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெய்சங்கரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா். மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தாகவும் தெரிகிறது.
இதுகுறித்து வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெய்சங்கா் செய்யாறு போலீஸில் புகாா் செய்தாா்.
காவல் உதவி ஆய்வாளா் ராமகிருஷ்ணன் வழக்குப் பதிந்து தெய்வசிகாமணியை கைது செய்தனா்.
பின்னா், செய்யாறு நீதிமன்றத்தில் அவரை ஆஜா்படுத்தி வந்தவாசி கிளைச் சிறையில் அடைத்தனா்.