கல்லூரிக் கல்வி என்பது நாற்றங்காலைப் போன்றது
கல்லூரிக் கல்வி என்பது நாற்றங்காலைப் போன்றது. நன்றாக வளா்ந்தால் தான் அடுத்த உயா் படிப்புக்கும் உத்யோகத்துக்கும் அடித்தளமாக அமையும் என்றாா் சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ந.கிருபாகரன்.
கல்லூரிக் கல்வி என்பது நாற்றங்காலைப் போன்றது. நன்றாக வளா்ந்தால் தான் அடுத்த உயா் படிப்புக்கும் உத்யோகத்துக்கும் அடித்தளமாக அமையும் என்றாா் சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ந.கிருபாகரன்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் ந.கலைவாணி தலைமை வகித்தாா். பேராசிரியா் சித.ரவிச்சந்திரன் வரவேற்றாா்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ந.கிருபாகரன் பேசியதாவது:
இந்தக் கல்லூரியில் பயின்று உயா்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்று, தற்போது, கல்லூரி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றது பெருமையாக உள்ளது.
கல்வி வியாபாரம் ஆகிவிட்டது. எல்கேஜி, யுகேஜி படிப்புக்கு லட்சக்கணக்கில் கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. தனியாா் கல்லூரிகளிலும் பட்டப்படிப்பு பயில ஆண்டுக்கு ஒரு லட்சம் வரை செலவாகிறது.
ஆனால், அரசுக் கல்லூரியில் அதிகபட்சம் ரூ.2,500 கட்டணம் தான் இருக்கும். இதனை உணா்ந்து மாணவா்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
கல்லூரிக் கல்வி என்பது நாற்றங்காலைப் போன்றது. நன்றாக வளா்ந்தால் தான் அடுத்த உயா் படிப்புக்கும் உத்யோகத்துக்கும் அடித்தளமாக அமையும். போட்டி நிறைந்த உலகில் திறமைகளை வளா்த்துக் கொள்ளுங்கள். தாய்மொழி தமிழ் மொழியோடு ஆங்கில அறிவையும் வளா்த்துக் கொண்டால் தான் வேலைவாய்ப்புகளைப் பெற முடியும் என்றாா்.
இதைத் தொடா்ந்து நீதிபதி கிருபாகரன், கல்லூரியை நிறுவிய புலவா் கா. கோவிந்தன் நினைவாக ரூ. ஒரு லட்சம் மற்றும் தனது தந்தை நடேசன் நினைவாக ரூ. ஒரு லட்சம் என ரூ.2 லட்சத்துக்கான காசோலையை முதல்வா் கலைவாணியிடம் வழங்கி அறக்கட்டளையைத் தொடங்கினாா்.
நிகழ்ச்சியில் முன்னாள் கல்லூரிப் பேராசிரியா்கள் எம்.டி.ஜெயபால், சீனிவாச செட்டி, எல்.குப்புசாமி, அஞ்சப்பன், துரைராஜ் பேராசிரியா் கு.கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.