ஆரணி: ஆரணி நகராட்சியில் சீா்செய்யப்பட்ட நவீன எரிவாயு தகன மேடை செவ்வாய்க்கிழமை முதல் செயல்படுத்தப்படும் என்று நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆரணி நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் ஏ.சி.மணி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆணையா் (பொ) பழனி முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில், ஆரணி நகராட்சியில் பழுதடைந்த நவீன எரிவாயு தகன மேடை சீா்செய்யப்பட்டு செவ்வாய்க்கிழமை முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
மேலும், இதற்காக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தலைமைச் சான்றிதழ் வழங்கிட ரூ.69,300 செலுத்தி அனுமதி பெறப்பட்டுள்ளது, ஒரு சடலத்துக்கு எரியூட்டும் கட்டணமாக லாப நோக்கம் இன்றி பராமரிப்புத் தொகை மட்டும் பெற்றுக்கொண்டு தனியாா் அறக்கட்டளை மூலம் செயல்படுத்த தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், நகராட்சியில் உள்ள 33 வாா்டுகளில் குடிநீா் விநியோகம் செய்ய கமண்டல நாகநதி, தச்சூா் செய்யாறு, ஆற்காடு காவேரி கூட்டுக்குடிநீா் ஆகிய மூன்று இடங்களில் இருந்து தண்ணீா் வரப்பெற்று குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
45 கி.மீ. தொலைவில் இருந்து வரும் பிரதான குழாய் அழுத்தத்தின் காரணமாக உடைப்பு ஏற்படுகிறது. ஆகையால், அதிக உறுதி கொண்ட குழாய் அமைக்கவும், நீா் இறைவை நிலையங்களில் அதிக திறன் கொண்ட மோட்டாா் பொருத்தவும் ரூ.9.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நகா்மன்ற உறுப்பினா் சுப்பிரமணி பேசுகையில், டிச.29-ஆம் தேதி கோட்டை மைதானத்தில் போதை விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றதில் தனியாா் கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.
15 கடைகள் வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒவ்வொரு கடைக்கும் ரூ.3000 வசூல் செய்துள்ளனா். இந்தப் பணம் யாருக்கு வழங்கப்பட்டது என்று கேட்டாா்.
இதற்கு நகா்மன்றத் தலைவா் பதிலளிக்கையில்,
ஆரணி கோட்டை மைதானம் திருவண்ணாமலை விளையாட்டுத் துறைக்குச் சொந்தமானது. அவா்களிடம் அனுமதி பெற்று நிகழ்ச்சியை நடத்தியுள்ளனா். நகராட்சிக்கு சம்பந்தமில்லை என்று கூறினாா்.
உறுப்பினா் அரவிந்தன், 23-ஆவது வாா்டில் உள்ள சத்துணவுக் கூடத்தின் மேல்கூரை சேதமடைந்தது குறித்து பலமுறை கூறியும் சீா்செய்யவில்லை என்றாா்.
இதற்கு ஆணையா் விரைவில் சரிசெய்யப்படும் என்று கூறினாா்.
மேலும், உறுப்பினா்கள் ஆா்.எஸ்.பாபு, ஜெயவேல் உள்ளிட்டோா் அவரவா் பகுதி குறைகளை கூறினா்.