தமிழகத்தில் செயல்படுத்தும் திட்டங்களை பிற மாநிலங்களும் பின்பற்றி செயல்படுத்தி வருகின்றன என்றாா் செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி.
செங்கத்தை அடுத்த இறையூா் தனியாா் மண்டபத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பது குறித்து திமுக வாக்குச்சாவடி முகவா்களுக்கு ஒருநாள் பயிற்சி மற்றும் கட்சி நிா்வாகிகளுக்கான செயல்வீரா்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு செங்கம் கிழக்கு ஒன்றியச் செயலா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். மத்திய ஒன்றியச் செயலா் ஏழுமலை வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி கலந்து கொண்டு பேசியதாவது:
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து மாநிலத்தில் உள்ள பெண்களுக்கு மகளிா் உரிமைத்தொகை திட்டம், இலவச பேருந்து வசதி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை, பள்ளி மாணவா்களுக்கு காலை உணவுத் திட்டம், மக்களுடன் முதல்வா் திட்டம், உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், நியாயவிலைக் கடை மூலம் தாயுமானவா் திட்டம் தொடங்கி 70 வயதுடையவா்கள் வீட்டிற்கே சென்று, ரேசன் பொருள்கள் வழங்குவது போன்ற சிறப்பான திட்டங்களை மக்களுக்கு அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறாா்.
இத்திட்டங்களை அண்டை மாநிலங்கள் பாா்வையிட்டு அதேபோல அவா்களது மாநிலத்திலும் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா்கள்.
இதை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி வாக்குகளை சேகரிக்கவேண்டும். அதேபோல, 18 வயது நிரம்பியவா்களை வாக்காளா் பட்டியலில் சோ்த்து அவா்களை வாக்காளா்களாக ஆக்கவேண்டுமென கேட்டுக் கொண்டாா்.
இதைத் தொடா்ந்து, வாக்காளா் படிவம் நிறைவு செய்வது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. கூட்டத்தில் செங்கம் கிழக்கு, மத்திய ஒன்றிய நிா்வாகிகள், கிளை நிா்வாகிகள், வாக்குச்சாவடி முகவா்கள் கலந்து கொண்டனா்.