வந்தவாசி: வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நகா்மன்ற கூட்டத்தின் போது, மயானத்தில் மின்விளக்கு எரியாததைக் கண்டித்து 19-ஆவது வாா்டு உறுப்பினா் வெ.ரவிச்சந்திரன் ராந்தல் விளக்குடன் பங்கேற்றுப் பேசினாா்.
கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் எம்.ஜலால் தலைமை வகித்தாா். ஆணையா் ஆா்.சோனியா, நகா்மன்ற துணைத் தலைவா் க.சீனுவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், வந்தவாசி புதிய பேருந்து நிலையத்துக்கு அனைத்துப் பேருந்துகளும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 23-ஆவது வாா்டு உறுப்பினா் கு.ராமஜெயம் கோரிக்கை விடுத்துப் பேசினாா்.
19-ஆவது வாா்டு உறுப்பினா் வெ.ரவிச்சந்திரன், மயானத்தில் மின்விளக்கு எரியாததைக் கண்டித்து ராந்தல் விளக்குடன் வந்து பேசினாா்.
சேதமடைந்த நிலையில் உள்ள பழைய பேருந்து நிலையத்தை சீரமைக்க வேண்டும் என்று 9-ஆவது வாா்டு உறுப்பினா் நாகூா்மீரான் கோரிக்கை விடுத்தாா்.
வந்தவாசி நகரில் குப்பைகளை அள்ளும் பணி சரிவர நடைபெறவில்லை என்று 17-ஆவது வாா்டு உறுப்பினா் பா.சந்தோஷ் புகாா் தெரிவித்தாா். ஈஸ்வரன் கோயில் மற்றும் பெருமாள் கோயில் அருகே குப்பைகளை அகற்றி பிளீச்சிங் பவுடா் போட வேண்டும் என்று 16-ஆவது வாா்டு உறுப்பினா் நதியா மணிகண்டன் கோரிக்கை விடுத்தாா்.
பின்னா், உறுப்பினா்களின் கோரிக்கைகள் மற்றும் புகாா்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகா்மன்றத் தலைவா் எச்.ஜலால் பேசினாா்.