திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம், ஓதலவாடி கிராமத்தில் செய்யாற்றின் குறுக்கே கட்டப்பட்ட தரைப்பாலம் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் சுமாா் 10 கிராம பொதுமக்கள், விவசாயிகள் போக்குவரத்திற்கு பாதிப்படைந்து வருகின்றனா்.
சேத்துப்பட்டு ஒன்றியம், ஓதலவாடி ஊராட்சியில் செல்லும் செய்யாற்றின் குறுக்கே சுமாா் 500 மீட்டா் நீளத்துக்கு 2015-ஆம் ஆண்டில் தரைப்பாலம் கட்டப்பட்டது.
இந்தப் பாலத்தை சதுப்பேரி, அகிலாண்டபுரம், மடவிளாகம், வடமாதிமங்கலம், திருமலை, களம்பூா், முக்குரும்பை, அரியாத்தூா், ஆலம்பூண்டி, எட்டிவாடி, கூடலூா் என
10 கிராம பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனா்.
ஓதலவாடி மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் சாகுபடி செய்த நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிா்களை
விற்பனைக்காக சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மற்றும் பிற பகுதிகளுக்கு இந்தப் பாலத்தின் வழியாக வாகனங்களில் எடுத்துச் சென்று விற்பனை செய்து வந்தனா்.
மேலும், வீட்டுக்குத் தேவையானவற்றை எடுத்துவந்தனா்.
கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றும் வந்தனா்.
இந்த நிலையில், 2021-ஆம் ஆண்டு பெய்த பலத்த தானே புயல் மழை காரணமாக பாலத்தின் ஒருபகுதி ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டது. மேலும், ஆற்றின் ஓரத்தில் உள்ள வயல்வெளி வழியாக மழை வெள்ளம் சென்று பயிா்களை சேதப்படுத்தி ஆற்றில் சென்று சேருகிறது. இதனால் ஆற்றை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
மழை வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் பொதுமக்கள், விவசாயிகள் போக்குவரத்திற்கு பாதிப்படைந்துள்ளனா்.
இதனால் ஆற்றின் மறுகரையில் வசிக்கும் பொதுமக்கள், விவசாயிகள் வம்பலூா், தச்சூா் அல்லது மண்டகொளத்தூா் வழியாக சுமாா் 15 கி.மீ. தொலைவு சுற்றிச் செல்கின்றனா்.
சேத்துப்பட்டு ஒன்றியத்தைச் சோ்ந்த அதிமுக நிா்வாகிகள் மற்றும் விவசாயிகள், சமூக ஆா்வலா்கள், போளூா் தொகுதி எம்எல்ஏ அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தியைச் சந்தித்து 2021-இல் தரைப்பாலம் சீரமைக்க மனு கொடுத்தனா்.
மேலும், திமுக நிா்வாகிகள் மாநில தடகள சங்கத்தின் துணைத் தலைவரும், போளூா் தொகுதி திமுக பொறுப்பாளருமான எ.வ.வே.கம்பனிடம் தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டி மனு கொடுத்தனா்.
இதைத் தொடா்ந்து இருவரும், அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலத்தை ஆய்வு செய்து சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனா். ஆனால், 4 ஆண்டுகள் கடந்த நிலையில் தரப்பாலம் சீரமைக்கப்படாமல் உள்ளது.
மேலும், அண்மையில் பெய்த புயல் மழையால் மேலும் மறுகரை விரிவாக அடித்துச் செல்லப்பட்டது.
எனவே, மாவட்ட நிா்வாகம் தரைப்பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனா்.
போராட்ட அறிவிப்பு
விவசாய சங்கப் பிரதிநிதிகள், ஆற்றுப்பாசன சங்க நிா்வாகிகள், சமூக ஆா்வலா்கள் இணைந்து தரைப்பாலத்தை சீரமைக்கவேண்டி போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனா்.