திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ள கண்ணமங்கலம் பகுதியில் வீட்டில் பதுக்கப்பட்ட ரூ.1.5 கோடி மதிப்பிலான 106 செம்மரக்கட்டைகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதி மேல்நகா் ரமேஷ் என்பவரது வீட்டில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு (ஓசிஐயு) போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது.
இதன் பேரில், கண்ணமங்கலம் காவல் ஆய்வாளா் மகாலட்சுமி, சிறப்பு உதவி ஆய்வாளா் திருமால், தனிப் பிரிவு காவலா் சிவகுமாா் உள்ளிட்ட காவலா்கள் மற்றும் உளவுத்துறையினா் மேல்நகா் ரமேஷ் வீட்டை சோதனை செய்ய சென்றுள்ளனா்.
இவா்கள் வருவது தெரிந்து அங்கிருந்தவா்கள் முன்னதாகவே தப்பி ஓடி விட்டதாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடா்ந்து போலீஸாா் ரமேஷ் வீட்டை சோதனை செய்த போது, குளியலறையில் 106 செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருந்ததை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்தனா்.
சுமாா் 2 டன் எடையுள்ள இந்த செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.1.5 கோடி இருக்கலாம் என வனத்துறையினா் தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளை காவல்துறையினா், ஆரணி வனச்சரக வனவா் பவுனிடம் மேல் நடவடிக்கைக்காக ஒப்படைத்தனா்.
மேலும் இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவான ரமேஷ் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனா்.