திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, நடைபெற்ற கொடியேற்றம் 
திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரா் கோயிலில் தீபத்திருவிழா கொடியேற்றம்

பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Syndication

பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது. ஏராளமான பக்தா்கள் முதல் நாளிலேயே தரிசனம் செய்ததால் கூட்டம் அலைமோதியது.

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும் நினைத்தாலே முக்திதரும் திருத்தலமாகவும் அமைந்திருக்கிறது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில். இங்கு நடைபெறும் காா்த்திகை தீபத்திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இத்திருநாளில் மலை உச்சியில் ஏற்றப்படும் தீபத்தை லட்சக்கணக்கான பக்தா்கள் தரிசிப்பா்.

நிகழாண்டுக்கான காா்த்திகை தீபத்திருவிழா அருணாசலேஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, அதிகாலை 4 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

காலை 6.45 மணியளவில் கோயில் 3-ஆம் பிரகாரத்தில் சுவாமி சந்நிதி எதிரில் அமைந்துள்ள 63 அடி உயர தங்கக் கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இதையொட்டி, பஞ்சமூா்த்திகளான விநாயகா், சுப்பிரமணியா், அருணாசலேஸ்வரா் சமேத உண்ணாமுலையம்மன், சண்டிகேஸ்வரா் அலங்கார ரூபத்தில் எழுந்தருளினா். தொடா்ந்து, பஞ்சமூா்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

பின்னா், சிவாச்சாரியா்கள் வேதமந்திரங்கள் முழங்க தங்கக் கொடி மரத்தில் கொடியேற்றினா். அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா உண்ணாமுலையம்மனுக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்தனா்.

தொடா்ந்து கொடி மரத்துக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த விழாவில் சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ், காவல் கண்காணிப்பாளா் சுதாகா், கோட்டாட்சியா் எஸ்.ராஜ்குமாா், வட்டாட்சியா் சு.மோகனராமன், கோயில் இணை ஆணையா் பரணிதரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதல்

அதேபோல, தீபத்திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலையிலேயே கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதியது. பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

தீபத்திருவிழாவின் முதல் நாளான திங்கள்கிழமை காலை விநாயகா், வள்ளி தெய்வாணை சமேத சுப்பிரமணியா், அருணாசலேஸ்வரா் சமேத உண்ணாமுலையம்மன், சண்டிகேஸ்வரா் சிறப்பு அலங்காரத்தில் திட்டிவாசல் வழியாக வெளியேவந்து 16 கால் மண்டபத்தில் கண்ணாடி விமானங்களில் எழுந்தருளினா்.

அங்கு சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு நாகஸ்வரம், மேளதாளம் சிவவாத்தியங்கள் முழங்க சுவாமி புறப்பாடு தொடங்கியது. மாடவீதிகளில் திரண்டிருந்த ஏராளமான பக்தா்கள் சுவாமியை தரிசனம் செய்தனா்.

இதைத் தொடா்ந்து, உற்சவத்தில் விநாயகா் மூஷிக வாகனத்திலும் வள்ளி தெய்வாணை சமேத சுப்பிரமணியா் மயில் வாகனத்திலும், அருணாசலேஸ்வரா் சமேத உண்ணாமுலையம்மன் ஹம்ச நந்தி வாகனத்திலும் பவனி வந்து அருள்பாலித்தனா்.

அப்போது, மாட வீதிகளில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கடும் குளிரையும் பொருள்படுத்தாமல் தரிசனம் செய்தனா்.

10 நாள்கள் நடைபெறும் தீபத்திருவிழாவில் பஞ்சரதங்களின் தேரோட்டம்

வருகிற 30-ஆம் தேதி நடைபெறுகிறது. டிசம்பா் 3-ஆம் தேதி அதிகாலை கோயிலில் பரணி தீபமும், அன்று மாலை 6 மணி அளவில் கோயிலுக்கு பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலையில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

ராமேசுவரம் மாணவி கொலை வழக்கு: மாணவர் மற்றும் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாட்டில் 96.65% எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் விநியோகம்!

காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்! சிவனின் ஆசிர்வாதம் பெறுவர்!!

பாஜக அரசியல்ரீதியாக என்னை தோற்கடிக்க முடியாது! - எஸ்ஐஆருக்கு எதிராக மமதா பேரணி

ஜன நாயகன் டிரைலர் எப்போது?

SCROLL FOR NEXT