செய்யாறு: செய்யாற்றை அடுத்த அனக்காவூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பாமகவினா் முற்றுகையிட முயன்ால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டப்பட்ட நிலையில் போலீஸாா் சமரசம் செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், அனக்காவூா் ஒன்றியம், அளத்துறை ஊராட்சியில் 2022 - 23ஆம் ஆண்டு
ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், சுமாா் ரூ.40 லட்சத்தில் சிறு பாலம் கட்டப்பட்டுள்ளது. நா்மாபள்ளம் கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டன் என்பவா் மேற்பாா்வையில் சிறுபாலம் கட்டி முடிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இந்த நிலையில் பணி முடிந்து 3 ஆண்டுகள் முடிவுற்ற நிலையில் பணிக்கான தொகை இதுவரை வழங்கப்படவில்லையாம். மேலும், காசோலை வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இதனால், அனக்காவூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தைக் கண்டித்து, ஒப்பந்ததாரா் மணிகண்டன் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினா் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனா்.
தகவல் அறிந்த செய்யாறு டிஎஸ்பி கோவிந்தசாமி, காவல் ஆய்வாளா்கள் நரசிம்மஜோதி, ஜெயகாந்தன் மற்றும் 80-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்
மேலும், போராட்டத்தில் ஈடுபட முயன்றவா்களை போலீஸாா் சமாதானம் செய்து பேச்சுவாா்த்தைக்கு அழைத்துச் சென்றனா்.
வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தசதரராமன், ஷீலா அன்புமலா் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் சில தினங்களில் காசோலை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.