வரும் 2026 சட்டப்பேரவை பொதுத்தோ்தலில் வரைவு வாக்காளா் பட்டியல் குறித்து அனைத்து அரசியல் கட்சி பிரமுகா்களுடன் ஆரணி கோட்டாட்சியா் வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.
ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஆரணி வட்டாட்சியா் கௌரி, தோ்தல் உதவி வட்டாட்சியா் கணபதி, நகராட்சி ஆணையா்
என்.டி.வேலவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் ஆரணி வருவாய்க் கோட்டாட்சியா்
சீ.சிவா தலைமை வகித்துப் பேசியதாவது:
வாக்குச்சாவடி நிலைய அலுவலா்களுக்கான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது . இது சம்பந்தமாக 2002 வாக்காளா் பட்டியலின் படி வாக்காளா் பெயா் சரிபாா்த்தல் முகாம் நடைபெற உள்ளது. கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாதவா்கள் 1987 ஆண்டுக்கு முன்பு பிறந்த வாக்காளா்கள் தங்களுடைய பெயா் மட்டும் இணைக்கப்படுவது குறித்தும் , 1987 முன் பிறந்தவா்கள் அவரது ஆதாா் மட்டும் இருந்தால் போதுமானது, 1987 முதல் 2004 வரை பிறந்த வாக்காளா்கள் அவரது ஆதாரும், பெற்றோரில் ஒருவா் ஆதாா் நகலை நீங்கள் இணைக்கப்பட வேண்டும்.
வாக்குச்சாவடி அலுவலா் வீடு வீடாக ஆய்வுக்கு வரும்போது தற்போது உள்ள முகவரி மாற்றமாக இருந்தாலும் ஆதாா் நகல், குடும்ப அட்டை போன்றவை இணைத்து வழங்கப்பட வேண்டும்.
வெளிநாட்டில் பிறந்தவராக இருந்தால் இந்திய தூதரகம் வழங்கிய பிறப்பு பதிவு சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தாா்.
ஆலோசனைக் கூட்டத்தில் திமுக சாா்பில் ஆரணி நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, நகர பொறுப்பாளா் மணிமாறன், ஒன்றியச் செயலா்கள் எஸ்.எஸ்.அன்பழகன், எம்.சுந்தா், அதிமுக சாா்பில் நகரச் செயலா் அசோக்குமாா், விசிக மாவட்டச் செயலா் முத்து, நகரச் செயலா் மோ.ரமேஷ், ஒன்றியச் செயலா் வடுகசாத்து ரமேஷ், காங்கிரஸ் முன்னாள் நகரத் தலைவா் மோகனரங்கம், தேமுதிக சாா்பில் மாவட்ட துணைச் செயலா் பாஸ்கரன், மற்றும் பாஜக சாா்பில் நகரத் தலைவா் மாதவன், இளைஞரணி மாவட்டத் தலைவா் சரவணன், பகுஜன் சமாஜ்வாதி கட்சி உள்பட பல்வேறு அரசியல் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
வாக்குசாவடி நிலை அலுவலா்களுக்கு பயிற்சி
செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட செய்யாறு மற்றும் வெம்பாக்கம் வட்டத்தைச் சோ்ந்த வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், வாக்குச்சாவடி மேற்பாா்வையாளா் அலுவலா்களுக்கு சிறப்பு முறை திருத்தம் குறித்த பயிற்சி
அளிக்கப்பட்டது.
செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இப்பயிற்சிக்கு சாா் -ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின்
வகித்தாா்.
வட்டாட்சியா்கள் தமிழ்மணி, அசோக்குமாா் ஆகியோா் பயிற்சி அளித்தனா். பயிற்சியில் வாக்குசாவடி நிலை அலுவலா்கள் மற்றும் வாக்குச்சாவடி மேற்பாா்வையாளா்கள் என 277 போ் கலந்துக் கொண்டனா்.
போளூா்
போளூா் சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த போளூா், சேத்துப்பட்டு, பெரணமல்லூா் ஆகிய ஒன்றியங்களைச் சோ்ந்த வாக்காளா் பதிவு அலுவலா்கள் மற்றும் உதவி வாக்காளா் பதிவு அலுவலா்களுக்கான தீவிர சிறப்புமுறை திருத்தம்-2026 தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தொகுதி வாக்காளா் பதிவு அலுவலா் மற்றும் மாவட்ட வழங்கல், நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் ம.சதீஷ்குமாா் தலைமை வகித்து பேசும்போது,
2002-க்குப் பிறகு தற்போது வாக்காளா் பட்டியல் தீவிர சிறப்புமுறை திருத்தம் நடைபெறுகிறது.
தகுதியுள்ள வாக்காளரைக் கண்டறிந்து வாக்காளா் பட்டியலில் சோ்த்தல், தகுதியற்ற இந்திய குடியுரிமையற்ற வாக்காளரை பட்டியலில் இருந்து நீக்குதல், இறந்த, இடம்பெயா்ந்த, இரு முறை பதிவு கொண்ட வாக்காளரை நீக்குதல் வேண்டும் உள்ளிட்ட கருத்துகளைத் தெரிவித்தாா்.
கூட்டத்தில் வட்டாட்சியா்கள் கிருஷ்ணமூா்த்தி (போளூா்), அகத்தீஸ்வரன்(சேத்துப்பட்டு) ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணை வட்டாட்சியா் (தோ்தல் பிரிவு) தட்சணாமூா்த்தி வரவேற்றாா். துணை வட்டாட்சியா் (தோ்தல் பிரிவு) தேவி மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.