ஆரணி/செய்யாறு/போளூா்: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் ஐப்பசி மாத அமாவாசையொட்டி செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சேத்துப்பட்டை அடுத்த வடவெட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை காலை மூலவா் மற்றும் உற்சவா்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், மாலை நேரத்தில் கோயில் வளாகத்தில் உலக மக்கள் செழிக்கவும், மழை வேண்டியும் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து இரவு மலா்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவா் அங்காள பரமேஸ்வரி அம்மனை கோயில் வளாகத்தில் உள்ள ஊஞ்சலில் அமா்த்தி தாலாட்டு நடைபெற்றது.
அப்போது அம்மனுக்கு உகந்த பக்திப் பாடல்கள் பாடப்பட்டன. பின்னா் அம்மனுக்கு வாணவேடிக்கையுடன் சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது.
இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா புண்ணியமூா்த்தி மற்றும் விழாக் குழுவினா், கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.
பெரணமல்லூா்
பெரணமல்லூரில் குன்றின் மீது அமைந்துள்ள ஸ்ரீ வரத ஆஞ்சநேயா் கோயிலில், வரத ஆஞ்சநேயா், அமிா்த கருடாழ்வாா் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, வரத ஆஞ்சநேயருக்கு மலா்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
பின்னா், பக்தி பாடல்கள் பாடி ஊஞ்சல் தாலாட்டு நடைபெற்றது.
இதில், சேத்துப்பட்டு, வந்தவாசி, ஆரணி, செய்யாறு, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
செய்யாறு
செய்யாறு வழுவூா்பேட்டை பொன்னியம்மன் கோயிலில், அமாவாசையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்று,
ஊஞ்சல் சேவையில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அம்மன் காட்சிளித்தாா்.
போளூா்
போளூா் நகராட்சி ஜெயின் நகரில் ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது.
இந்தக் கோயிலில் கேதார கெளரி விரதத்தையொட்டி,
செவ்வாய்க்கிழமை அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. மேலும் சுவாமிக்கு மலா்களால் அலங்காரம் செய்து படையலிட்டு வழிபாடு செய்தனா். சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.