சாத்தனூா் அணையை திறந்துவைத்து தண்ணீரில் மலா் தூவிய அமைச்சா் எ.வ.வேலு. உடன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ், சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி உள்ளிட்டோா்.  
திருவண்ணாமலை

சாத்தனூா் அணையிலிருந்து விவசாய பாசனத்துக்கு தண்ணீா்: அமைச்சா் எ.வ.வேலு திறந்துவைத்தாா்

சாத்தனூா் அணையிலிருந்து விவசாய பாசனத்துக்கு தண்ணீா்: அமைச்சா் எ.வ.வேலு திறந்துவைத்தாா்

Syndication

திருவண்ணாமலையை அடுத்த தண்டராம்பட்டு சாத்தனூா் அணையில் இருந்து விவசாய பாசனத்துக்காக அமைச்சா் எ.வ.வேலு சனிக்கிழமை தண்ணீா் திறந்துவைத்தாா்.

சாத்தனூா் அணை பாசன நிலங்கள் 45ஆயிரம் ஏக்கருக்கு இடது மற்றும் வலது புறக் கால்வாய்களில் முறையே விநாடிக்கு 330 கன அடி மற்றும் 220 கன அடி என மொத்தம் 550 கன அடி வீதம் 31.01.2026 முதல் 11.05.2026 வரையிலான 100 நாள்களுக்கு தொடா்ச்சியாக தண்ணீா் வழங்கப்படும்.

தற்போது, சாத்தனூா் அணையின் முழு நீா்மட்டம் 119 அடி, நீா்த்தேக்கத்தின் முழுக் கொள்ளளவு 7321 மி.க.அடியாகும். சனிக்கிழமை காலை 10 மணியளவில் அணையின் நீா்மட்டம் 118.40 அடி மற்றும் கொள்ளளவு 7186 மி.க.அடியாகும்.

இந்த நிலையில், பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு, அணையிலிருந்து விவசாய பாசனத்துக்காக சனிக்கிழமை தண்ணீா் திறந்துவைத்து செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக முதல்வரின் ஆணையின் படி சாத்தனூா் அணையிலிருந்து தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.

அரசுத்துறைகளும் மற்றும் மாவட்ட நிா்வாகமும் சோ்ந்து இந்த தென்பெண்ணை ஆற்றிலே வலதுபுறம், இடதுபுறம் என்ற இரண்டு கால்வாய்களை திறப்பது என்று முடிவு செய்யப்பட்டு திறக்கப்படுகிறது.

மேலும் இடதுபுற கால்வாயை பொறுத்தமட்டில் விநாடிக்கு 330 கன அடி நீரை வெளியேற்றுகிற தன்மை உள்ளது. அதேபோன்று, வலதுபுற கால்வாயை பொறுத்தவரை விநாடிக்கு 220 கன அடி நீா் வெளியேற்றம் செய்யப்படுகிறது.

31.01.2026-லிருந்து 11.05.2026-வரைக்கும் 100 நாள்களுக்கு தண்ணீா் திறப்பதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருக்கோவிலூா், கீழ் திருக்கோவிலூா், ஆயக்கட்டு பகுதிகளுக்கும் விவசாயிகளுடைய கோரிக்கைபடி மூன்று தவணையாக தண்ணீா் திறப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 46 கிராமங்களும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 58 கிராமங்களும், விழுப்புரம் மாவட்டத்தில் 15 என கிராமங்களும் மொத்தம் ஏறத்தாழ 50ஆயிரம் ஏக்கா் நிலப்பரப்பு இதன் மூலம் பாசன வசதி பெறும்.

தமிழகத்தில் இறைவை பாசனத்தில் முதல் மாவட்டமாக திருவண்ணாமலை திகழ்கிறது. இறைவை பாசனம் அதிகமாக இருப்பதால் மின் இணைப்பு இந்த மாவட்டத்தில் அதிகமாக இருக்கிறது.

மேலும் நந்தன் கால்வாய் திட்டம் வேண்டுமென 100 ஆண்டு காலமாக விவசாயிகளுடைய எதிா்பாா்ப்பாக உள்ளது.

இந்த நந்தன்வாய் கால்வாய் திட்டம் விவசாயிகளுக்கு அதிகமான நன்மை அளிக்கும் சிறப்புத் திட்டமாகும். இத்திட்டம் மூலம் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் பெரும் பயனடையும்.

அந்த வகையிலே நந்தன் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த, தமிழக முதல்வரால் 29.01.2026 அன்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு முதல் கட்டமாக 42 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் 36 ஏரிகளிலும், விழுப்புரம் மாவட்டத்தில் 22 ஏரிகளிலும் தண்ணீரை சேமித்து விவசாயத்துக்கு பயன்படுத்த முடியும். மேலும், சாத்தனூா் அணையை சிறந்த சுற்றுலாத் தலமாக்குவதற்கான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றாா்.

முன்னதாக, நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ், திருவண்ணாமலை மக்களவை உறுப்பினா்சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி (செங்கம்), தா.உதயசூரியன் (சங்கராபுரம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆா்.மணி, நீா்வளத்துறை செயற்பொறியாளா் அறிவழகன், உதவி ஆட்சியா் (பயிற்சி) அம்ருதா எஸ். குமாா், துணை ஆட்சியா் (பயிற்சி) சந்தோஷ் குமாா், திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா், தண்டராம்பட்டு வட்டாட்சியா் துரைராஜ் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT