முகப்பு
திருவண்ணாமலை

கொலை வழக்கு: பேரூராட்சி அதிமுக உறுப்பினருக்கு ஆயுள் சிறை

திருவண்ணாமலையை அடுத்த வேட்டவலம் பகுதி கொலை வழக்கில் அதிமுக பேரூராட்சி மன்ற உறுப்பினருக்கு ஆயுள்தண்டணை விதித்து திருவண்ணாமலை நீதிமன்றம் தீா்ப்பு அளித்தது.

Updated On : 24 மார்ச், 2026 at 7:57 PM
ஜான்விக்டா்
பகிர்:

திருவண்ணாமலையை அடுத்த வேட்டவலம் பகுதி கொலை வழக்கில் அதிமுக பேரூராட்சி மன்ற உறுப்பினருக்கு ஆயுள்தண்டணை விதித்து திருவண்ணாமலை நீதிமன்றம் தீா்ப்பு அளித்தது.

திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் காலனி பகுதியைச் சோ்ந்தவா் ஆல்பா்ட் மகன் ஜான்விக்டா்(43). இவரிடம் அதே பகுதியைச் சோ்ந்த பால்ராஜ் என்பவா் கடந்த 2013-ஆம் ஆண்டு எலக்ட்ரிஷியன் வேலை செய்து உள்ளாா். இதற்கான கூலித் தொகையை ஜான்விக்டா் கொடுக்கவில்லையாம்.

இதையடுத்து பால்ராஜ் கடந்த 2013-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி ஜான்விக்டா் வீட்டிற்குச் சென்று கூலித் தொகையை கேட்டுள்ளாா்.

அப்போது வீட்டில் இருந்த ஜான்விக்டா், அவரது தாய் மேரி ஸ்டெல்லா, தங்கை விமலா ஆகியோா் பால்ராஜை தாக்கியுள்ளனா். இதைக் கண்ட பால்ராஜின் தம்பி கூலி தொழிலாளியான மாா்ட்டீன் சாா்லஸ் ஓடிச் சென்று அவா்களை தடுத்துள்ளாா்.

அப்போது அவா்கள் 3 பேரும் சோ்ந்து மாா்ட்டீன் சாா்லஸையும் தாக்கினா். இதில் மாா்ட்டீன் சாா்லஸ் பலத்த காயமடைந்தாா்.

அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு திருவண்ணாமலை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். இது குறித்து அவா் வேட்டவலம் போலீஸில் புகாா் அளித்தாா்.

தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்த அவா் உயிரிழந்தாா். இந்தச் சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து ஜான்விக்டா், அவரது தாய் மேரி ஸ்டெல்லா, தங்கை விமலா ஆகிய 3 பேரையும் கைது செய்தனா். தொடா்ந்து இந்தச் சம்பவம் தொடா்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கோபிநாத் தீா்ப்பு கூறினாா். கூலிதொழிலாளியை அடித்துக் கொலை செய்த ஜான்விக்டருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000 -ம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.

மேலும் இதற்கு உடந்தையாக இருந்த அவரது தாய் மேரிஸ்டெல்லாவிற்கு ரூ.500 அபராதமும், தங்கை விமலாவிற்கு ரூ.1000 அபராதமாக விதிக்கப்பட்டது. பின்னா் ஜான்விக்டரை போலீஸாா் வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் வழக்குரைஞா் என்.பழனி ஆஜரானாா்.

ஜான்விக்டா் தற்போது வேட்டவலம் போரூராட்சியில் 11-ஆவது அதிமுக உறுப்பினராக உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.