வேலூர்

அரசு மருத்துவமனையில் மருந்தாளுநர்கள் பற்றாக்குறை: நோயாளிகள் பாதிப்பு

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் மருந்தாளுநர்கள் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

DIN


ஆம்பூர் அரசு மருத்துவமனையில் மருந்தாளுநர்கள் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 
ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு தினமும் 1,700 புறநோயாளிகள் வந்து செல்கின்றன.  சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு தொடர்ந்து மருந்து, மாத்திரை சாப்பிடும் நோயாளிகள் 300 பேர் தினமும் மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.  இவர்களுக்கு ஆம்பூர் அரசு மருத்துமனையில் உள்ள மருந்தகத்தில் மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வந்தன. சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு தொடர் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் நீண்ட நேரம் நிற்க முடியாது என்பதால் அவர்களுக்கென தனி கவுன்ட்டர் மூலம் வழங்கப்பட்டு வந்தது. மருத்துவமனைக்கு வரும் புறநோயாளிகளுக்கு ஆண்கள், பெண்கள் என இரு தனி கவுன்ட்டர்கள் மூலம் மருந்து, மாத்திரை வழங்கப்பட்டு வந்தன.
ஆம்பூர் அரசு மருத்துவமனையில் 5 மருந்தாளுநர்கள் இருக்க வேண்டும். ஆனால் கடந்த மாதம் வரை 3 மருந்தாளுநர்கள் பணிபுரிந்து வந்தனர். 
அவர்களில் ஒருவர் அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதனால் தற்போது 2 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.  நிர்வாக ரீதியான பணிகள், மருந்து, மாத்திரைகள் கணக்கெடுப்பு, பிரேதப் பரிசோதனை மற்றும் அதன் அறிக்கை, மருந்து, மாத்திரைகளை நோயாளிகளுக்கு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மருந்தாளுநர்கள் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை காரணமாக 3 கவுன்ட்டர்களில் ஒரு கவுன்ட்டர் மூடப்பட்டது.
அதனால் ஒரே கவுன்ட்டரில் நீண்ட வரிசையில் காத்திருந்து மருந்து, மாத்திரைகளை நோயாளிகள் வாங்கி செல்ல வேண்டிய நிலை உள்ளது. சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட நேரம், நீண்ட வரிசையில் நிற்பதால் அவர்களுக்கு மயக்கம் ஏற்படுகிறது. 
எனவே, 3 மருந்தாளுநர்கள் மருந்தகத்தில் பணிபுரிந்தால் மட்டுமே 3 கவுன்ட்டர்கள் செயல்பட வாய்ப்புள்ளது. 
இதுகுறித்து முன்னாள் நகர்மன்ற உறுப்பினரும், சமூக ஆர்வலருமான இ.சுரேஷ்பாபு கூறியது:
நாள்தோறும் சுமார் 2000 நோயாளிகள் அரசு மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். இவர்கள் வரிசையில் நின்று மருந்து, மாத்திரைகளை வாங்கிச் செல்ல நீண்ட நேரம் ஆகிறது. இதனால் கூடுதல் கவுன்ட்டர்களை திறக்க வேண்டும். அதற்கு கூடுதல் மருந்தாளுநர்களை நியமிக்க சம்பந்தப்பட்ட துறை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து ஆம்பூர் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் கென்னடி கூறியது: 
மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் உத்தரவின் பேரில் இங்கிருந்த ஒரு மருந்தாளுநர் அணைக்கட்டுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார் என்றார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர், மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் ஆகியோர் கூடுதல் கவனம் செலுத்தி மருந்தாளுநரை நியமித்து, கூடுதல் கவுன்டர்களை உடனே திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் : சௌமியாஅன்புமணி

பெரம்பலூரில் தரைக்கடை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 475 மனுக்கள் ஏற்பு

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 27 பேருக்கு குடும்ப அட்டைகள்

புதுச்சேரியில் திருப்பரங்குன்றம் மாதிரி தீபத் தூணில் இன்று தீபம் ஏற்றும் நிகழ்ச்சி: அண்ணாமலை பங்கேற்பு

SCROLL FOR NEXT