வேலூர்

அன்பால் அனைத்தையும் சாதிக்க முடியும்: ஜயந்தி விழாவில் ஸ்ரீசக்திஅம்மா ஆசியுரை

"உலகில் உள்ள அனைவரிடமும் சக்தி உள்ளது. அந்த சக்தியுடன் அன்பும் இருந்தால் அனைத்தையும் சாதிக்க முடியும்'

DIN

"உலகில் உள்ள அனைவரிடமும் சக்தி உள்ளது. அந்த சக்தியுடன் அன்பும் இருந்தால் அனைத்தையும் சாதிக்க முடியும்' என்று வியாழக்கிழமை நடைபெற்ற ஜயந்தி விழாவில் ஸ்ரீபுரம் நாராயணி பீடம் ஸ்ரீ சக்திஅம்மா ஆசியுரை வழங்கினார்.
வேலூரை அடுத்த அரியூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடம் ஸ்ரீசக்தி அம்மாவின் 43-ஆவது ஜயந்தி விழா கடந்த டிசம்பர் 15-ஆம் தேதி தொடங்கியது. தினமும் பல்வேறு ஹோமங்கள், சிறப்புப் பூஜைகள் நடைபெற்று வந்தன. புதன்கிழமை கணபதி ஹோமம், சுப்பிரமணிய ஹோமம், பிரம்மசூக்த ஹோமம், மேதா சூக்த ஹோமம் உள்ளிட்ட பல்வேறு யாகங்கள் நடத்தப்பட்டன. 
இதைத் தொடர்ந்து, ஸ்ரீ சக்தி அம்மாவின் ஜயந்தி விழா வியாழக்கிழமை விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அதிகாலை 5 மணி முதல் கணபதி ஹோமம், ஆயுஷ் ஹோமம், ஸ்ரீநாராயணி ஹோமம், காலை 10 மணிக்கு பூர்ணாஹுதி ஆகியவை நடைபெற்றன. 
பின்னர், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஸ்ரீநாராயணி பக்த சபாவைச் சேர்ந்த பக்தர்கள் யானை, குதிரை, கரகாட்டம், கோலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் வரிசைத் தட்டுகளுடன் ஊர்வலமாக ஸ்ரீ நாராயணி  யாகசாலை மண்டபத்துக்குச் சென்றனர். அங்கு பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, சிங்கப்பூர், கனடா ஆகிய நாடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்களும் ஸ்ரீசக்தி அம்மாவுக்கு மலர் அபிஷேகம், பாதபூஜை செய்தனர். 
நிகழ்ச்சியில், அஸ்ஸாம் மாநில ஆளுநர் ஜெகதீஷ் முகி, உத்தரகண்ட் மாநில ஆளுநர் பேபிராணி மௌர்யா, கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா, கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஷ்வர சுவாமிகள் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று வாழ்த்திப் பேசினர். 
பின்னர், ஆசியுரையில் ஸ்ரீசக்திஅம்மா பேசியது: ஒருகாலத்தில் மலைக்கோடி என்றால் யாருக்கும் தெரியாது. தற்போது தெய்வத்தின் அருளால் உலகம் போற்றக்கூடிய புனிதமான இடமாக ஸ்ரீபுரம் மாறியுள்ளது. முன்பெல்லாம் யாரேனும் தவறு செய்தால் வேலூர் சிறைக்கு அனுப்பி விடுவோம் என்பார்கள். 
இந்த நிலைமை மாறி, தற்போது வேலூர் என்றாலே மகாலட்சுமிதான் அனைவரது நினைவுக்கும் வருகிறது. இதற்கு சக்திதான் காரணமாகும். உலகில் உள்ள அனைவரிடமும் சக்தி உள்ளது. அந்த சக்தியுடன் அன்பும் இருந்தால் அனைத்தையும் சாதிக்க முடியும். எனவே, ஒவ்வொருவரிடமும் சக்தியுடன் அன்பும் மிகமிக அவசியம். 
உலகத்தில் அனைத்தும் நன்மையாக இருக்கவே வேண்டும். அனைத்தும் நன்மையாக இருக்க வேண்டுமெனில் அனைவரும் சக்தியுடன் சேர்த்து அன்பையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர். 
மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் ஆகியோர் சக்தி அம்மாவுக்கு மாலை அணிவித்து ஆசி பெற்றனர். இதேபோல், ஜலகண்டேஸ்வரர் கோயில் சார்பில் கலவை சச்சிதானந்த சுவாமிகள் கோயில் பிரசாதங்களை அளித்தார். மேலும், ஆன்மிகவாதிகள், முக்கியப் பிரமுகர்களும் பல்வேறு கோயில்களின் பிரசாதங்களை ஸ்ரீசக்தி அம்மாவிடம் அளித்து ஆசி பெற்றனர். அறங்காவலர் சௌந்தரராஜன் நன்றி கூறினார்.
விழா ஏற்பாடுகளை ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தின் இயக்குநர் சுரேஷ், மேலாளர் சம்பத் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணியில் தவெக இணைய வேண்டும்: வேலூா் இப்ராஹிம்

‘யாசகம்’ இகழ்ச்சி அல்ல!

அந்தியூரில் ரூ.3.44 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

முன்னாள் ஆட்சியா் எழுதிய நூல்கள் வெளியீடு

செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் விஜய் பயணிப்பாா்: ஆனந்த்

SCROLL FOR NEXT