மண்டல அளவிலான அஞ்சல்துறை விநாடி-வினா போட்டிகள்: 2 -ஆம் இடம் பெற்ற கடற்படை குழந்தைகள் பள்ளி
சென்னை மண்டல அளவிலான அஞ்சல்துறை விநாடி-வினா போட்டிகளில் இரண்டாம் இடம் பெற்ற அரக்கோணம்
சென்னை மண்டல அளவிலான அஞ்சல்துறை விநாடி-வினா போட்டிகளில் இரண்டாம் இடம் பெற்ற அரக்கோணம் கடற்படை குழந்தைகள் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் பாராட்டு தெரிவித்தது.
மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாளையொட்டி இந்திய அஞ்சல்துறை பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்கும் விநாடி-வினா போட்டியை நடத்துகிறது.
காந்தியின் வாழ்க்கை வரலாறு, காந்தியின் தபால்தலை, இன்றைய நடப்புகள் ஆகிய தலைப்புகளில் அரக்கோணம் கோட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் முதல் பரிசு பெற்ற அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதள வளாக கடற்படை குழந்தைகள் பள்ளி 9ஆம் வகுப்பு மாணவர்கள் அரிகுமார், ஜெய்கிருஷ்ணா ஆகியோர் இணைந்து முதற்பரிசைப் பெற்றனர். இந்நிலையில் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றை உள்ளடக்கிய சென்னை மண்டல அளவிலான போட்டிகளில் அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதள வளாக கடற்படை குழந்தைகள் பள்ளியின் 9ஆம் வகுப்பு மாணவர்கள் அரிகுமார், ஜெய்கிருஷ்ணா ஆகியோர் இணைந்து இரண்டாம் பரிசைப் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசை தலைமை அஞ்சல்துறை அதிகாரி ஆனந்த் வழங்கினார். வெற்றிபெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர் இருவரையும் பள்ளி நிர்வாகத்தினரும், ஆசிரியர்களும் பாராட்டினர்.