முகப்பு
வேலூர்

வேலூர் அருகே 8 குடிசைகள் தீக்கிரை: லட்சக்கணக்கில் பொருள்கள் சேதம்

வேலூர் அருகே புதன்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் 8 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலாகின. இதில், அந்தக் குடிசைகளில்

Updated On : 23 ஜனவரி 2019, 11:34 pm IST
பகிர்:

வேலூர் அருகே புதன்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் 8 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலாகின. இதில், அந்தக் குடிசைகளில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புடைய பொருள்கள் தீக்கிரையாகின. 
வேலூர் சேண்பாக்கம், திரௌபதியம்மன் கோயில் தெருவில் உள்ள புறம்போக்கு நிலத்தில் 15 குடிசை வீடுகள் உள்ளன. இங்கு வசிக்கும் குடும்பங்கள் பெரும்பாலும் கூலித் தொழில் செய்து வருகின்றனர். அவர்கள் புதன்கிழமை காலை வேலைக்குச் சென்றிருந்தனர். அப்போது, ஒரு வீட்டில் காலை 8.30 மணியளவில் சரத்குமார் என்பவரின் மனைவி சங்கீதா சமையல் செய்து கொண்டிருந்தார். 
இடையில் அருகே இருந்த கடைக்குச் சென்று விட்டு சங்கீதா வீடு திரும்பியபோது அவரது குடிசையில் தீப்பற்றி எரிந்துள்ளது.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் அக்கம்பக்கத்தினருக்கு தகவல் அளித்தார். அவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும், அடுத்தடுத்து உள்ள வேலு, சின்னச்சாமி, ஏழுமலை, கமலா, பேபி, மாவீரன், அம்முலு ஆகியோரின் குடிசை வீடுகளிலும் வேகமாக தீ பரவியது. தகவலறிந்த விரைந்து வந்த வேலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் விநாயகம் தலைமையிலான 10 வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரம் போராடி தீயை முழுமையாக அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் அந்த 8 குடிசை வீடுகளில் இருந்த துணிகள், வீட்டு உபயோகப் பொருள்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள், 2 மோட்டார் சைக்கிள்கள் என லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புடைய பொருள்கள் எரிந்து சாம்பலாகின. பாதிக்கப்பட்ட பகுதியை வருவாய்த்துறை அலுவலர்கள் பார்வையிட்டு முதற்கட்ட நிவாரணமாக 5 கிலோ அரிசி, மண்ணெண்ணெய், வேட்டி, சேலை ஆகியவை வழங்கினார். அதைத் தொடர்ந்து குடும்பத்துக்கு தலா ரூ.2,500 பணம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.