செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!
செய்யறிவு ஆதிக்கத்தை தகர்க்க போப் லியோ அழைப்பு விடுத்திருப்பது பற்றி...
மனித குலத்தை அடிமைப்படுத்தும் செய்யறிவின் ஆதிக்கத்தை தடுக்க அதனை நிராயுதபாணியாக்க வேண்டும் என்று போப் 14-ஆம் லியோ திங்கள்கிழமை தெரிவித்தார்.
கத்தோலிக்க திருச்சபையின் 266-ஆவது போப் பிரான்சிஸ் வயது முதிா்வு காரணமாக கடந்தாண்டு மறைந்த நிலையில், புதிய போப்பாக அமெரிக்காவைச் சேர்ந்த பதினான்காம் லியோ தேர்ந்தெடுக்கப்பட்டார்.
உலகம் முழுவதிலும் உள்ள சுமார் 140 கோடி கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைவரான 14-ஆம் லியோ, ‘மகத்தான மனிதநேயம்’ (Magnifica Humanitas – ‘மக்னிஃபிகா ஹியூமனிடாஸ்’) என்ற பெயரில் தனது முதல் மடலை திங்கள்கிழமை வெளியிட்டார்.
Advertisement
Advertisement
வாடிகனில் திங்கள்கிழமை நடைபெற்ற ‘மகத்தான மனிதநேயம்’ மடல் வெளியீட்டு விழாவில், அமெரிக்காவின் முன்னணி செய்யறிவு நிறுவனமான ’ஆந்த்ரோபிக்'கின் இணை நிறுவனர் கிறிஸ்டோபர் ஓலா உள்ளிட்ட முக்கிய தொழில்நுட்ப வல்லுநர்கள் பங்கேற்றிருந்தனர்.
இந்த நிகழ்வில், ”வலுவான சட்டக் கட்டமைப்புகள், சுதந்திரமான மேற்பார்வை மற்றும் பொறுப்பிலிருந்து விலகாத ஒரு அரசியல் அமைப்பு” ஆகியவற்றை முன்னெடுக்க சர்வதேச தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து தனது உரையை போப் லியோ தொடங்கினார்.
தனது மடலில் செய்யறிவு குறித்து குறிப்பிடப்பட்டிருப்பதை விளக்கிப் பேசிய போப் லியோ தெரிவித்ததாவது:
”செய்யறிவு தரவுகள் தனியாருக்கு மட்டுமே சொந்தமாக இருக்கக் கூடாது. தொழிலாளர்களின் உரிமைகளையும், குழந்தைகளையும் இந்த தொழில்நுட்பத்தில் இருந்து பாதுகாப்பாக வைத்திருக்க கொள்கை வகுக்க வேண்டும்.
ஒரு சில நிறுவனங்கள் மற்றும் நாடுகள் தங்களின் உலகளாவிய ஆதிக்கத்துக்காகவும் லாபத்துக்காகவும் மிக சக்திவாய்ந்த கணக்கீட்டு விதிகளை (Algorithms) உருவாக்குவதை நிறுத்த வேண்டும். லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு மனித உழைப்பை ஏஐ மூலம் ஒட்டுமொத்தமாக மாற்றுவது எதிர்காலத்தில் மிகப்பெரிய சமுதாயப் பேரழிவை ஏற்படுத்தும்.
செய்யறிவை நிராயுதபாணியக்க வேண்டும். அதை ஆதிக்கம் மற்றும் மரணத்தின் கருவியாக மாற்றும் தர்க்கங்களிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும், அணுசக்தியைப் போல, அனைவருக்குமான பொது நன்மைக்கு சேவை செய்யும் வகையில் மாற்ற வேண்டும்.
உயிரைப் பறிக்கும் வகையிலான முடிவுகளைத் தொழில்நுட்பத்தின் கையில் ஒப்படைப்பது ஏற்புடையது அல்ல” எனத் தெரிவித்தார்.
மேலும், ஈரானுக்கு எதிரான போரை “நீதிக்கான போர்” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் குறிப்பிட்டதை, இந்த கோட்பாடு “காலாவதியான ஒன்று” என்று தனது மடலில் போப் எழுதியுள்ளார். மேலும், ”எந்தவொரு கோட்பாடும் போரை அறநெறி ரீதியாக ஏற்புடையதாக்கிவிட முடியாது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வில், செய்யறிவுப் போர் மற்றும் கண்காணிப்புக்காக தனது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை எதிர்த்ததால், அமெரிக்க ராணுவத்துடன் சட்டப் போராட்டத்தை சந்தித்து வரும் ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் இணை நிறுவனர் கிறிஸ்டோபர் ஓலா உரையாற்றினார்.
”கத்தோலிக்க திருச்சபை போன்ற வெளித் தரப்பினரின் உள்ளீடுகளை வரவேற்கிறோம். செய்யறிவு எழுப்பும் கேள்விகள், செய்யறிவு ஆராய்ச்சி சமூகத்தைவிடப் பெரியவை.
செய்யறிவால் ஏற்படக்கூடும் பரவலான வேலை இழப்பு அபாயம், உலகம் முழுவதும் செய்யறவு நன்மைகள் சென்றடைவதை உறுதி செய்வது ஆகியவற்றில் அவசர கவனம் தேவை” என்றார்.
‘மகத்தான மனிதநேயம்’ மடலானது, 140 கோடி கத்தோலிக்க கிறிஸ்துவர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த பிரகடனம் ஆகும். போப் லியோ பொறுப்பேற்றதில் இருந்து ஓராண்டாக இந்த மடல் உருவாக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
Pope Leo XIV has called for the disarming of artificial intelligence (AI)
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.