மே 30 வரை வெய்யில் கொளுத்தும்! எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை?
வெய்யில், கனமழை பற்றி வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பது பற்றி..
தமிழ்நாட்டில் மே 30 வரை 3 டிகிரி செல்சியஸ் வரை வெய்யில் அதிகரிக்கும், அதேசமயம் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சுமார் 3.1 கிமீ முதல் 7.6 கிமீ உயரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
சுமார் 3.1 கிமீ முதல் 7.6 கிமீ உயரத்தில் மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
Advertisement
Advertisement
இதன் காரணமாக, இன்று (மே 26) கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, சேலம், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.
மே 27 முதல் 30 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை..
மே 26 முதல் 30 வரை கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. எனினும், உள் தமிழக பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் வரை உயரக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேலூர் 42.3 செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக கரூர் பரமத்தில் 24.0 டிகிரி செல்சியஸும், கொடைக்கானலில் 13.2 டிகிரி செல்சியஸும் பதிவானது.
சென்னை பொருத்தவரை..
இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40-41° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை..
மே 26 முதல் 30 வரை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.