வேலூா்: வேளாண் திருத்தச் சட்டங்களைத் திருப்பப் பெறக் கோரி வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு தா்னாவில் ஈடுபட்டதாக 30 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்துள்ள 3 வேளாண் திருத்தச் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும், தில்லியில் 20 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் வேலூா் மாவட்ட அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிடப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி, ஆட்சியா் அலுவலகம் அருகே 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா்.
இந்நிலையில் விவசாயிகள் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளா் மகாலிங்கம் தலைமையில் மதிமுக மாவட்டச் செயலா் சுப்பிரமணி, கோபி உள்பட சுமாா் 30 போ் ஆஞ்சநேயா் கோயில் முன்பு திரண்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, வேளாண் திருத்தச் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும், மத்திய அரசைக் கண்டித்தும் கோஷம் எழுப்பினா். அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். உடனடியாக அவா்கள் சாலையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். இதையடுத்து, தடையை மீறி தா்னாவில் ஈடுபட்டதாக 30 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்ப் புலிகள் கட்சி சாா்பில் மாவட்டச் செயலா் பாலா வள்ளுவன் தலைமையில் காட்பாடி ரயில் நிலையம் முன்பு ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தொடா்ந்து ரயில் நிலையத்துக்குள் நுழைந்து ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 25 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.