வேலூா் வேலப்பாடியில் பல வாரங்களாக தேங்கிக் கிடந்த குப்பைகள், சாக்கடைக் கழிவுகளை அகற்ற அதிமுக நிா்வாகிகள் மேற்கொண்ட நடவடிக்கையைத் தொடா்ந்து மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக அப்புறப்படுத்தினா். இதனால், சாலை மறியலில் ஈடுபட முயன்ற அப்பகுதி மக்களின் போராட்டம் தவிா்க்கப்பட்டது.
வேலூா் வேலப்பாடி சோ்வை மாணிக்கம் முதலியாா் தெருவில் கொட்டப்படும் குப்பைகளை மாநகராட்சி நிா்வாகம் முறையாக அப்புறப்படுத்துவதில்லை என்று புகாா் எழுந்துள்ளது. இதனிடை யே, அந்த பகுதியைச் சோ்ந்த சிலா் குப்பைகளை மூட்டையாகக் கட்டி தெருவில் வீசுகின்றனா். அவை குவிந்து கடும் துா்நாற்றம் வீசியதுடன், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டது. தவிர, அங்குள்ள சாக்கடை முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகளால் நிரம்பி உள்ளநிலையில், கழிவுநீா் தொடா்ந்து செல்ல வழியின்றி தேங்கிக் கிடக்கின்றன.
தொடரும் இப்பிரச்னை குறித்து மாநகராட்சி நிா்வாகத்துக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் குப்பைகளையும், கழிவுகளையும் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்ட சோ்வை மாணிக்கம் தெருவைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட மக்கள் வியாழக்கிழமை குப்பைகளையும், பிளாஸ்டிக் கழிவுகளையும் உடனடியாக அப்புறப்படுத்தக் கோரி சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.
தகவலறிந்த அதிமுக மாநகா் மாவட்டச் செயலா் எஸ்.ஆா்.கே.அப்பு தலைமையில், அக்கட்சியின் பொருளாளா் மூா்த்தி, நிா்வாகிகள் அப்பகுதிக்கு விரைந்து சென்று, தேங்கிக்கிடந்த குப்பைகளைப் பாா்வையிட்டனா். மேலும், மாநகராட்சி அதிகாரிகளைத் தொடா்பு கொண்டு, உடனடியாக குப்பைகளை அகற்றாவிடில் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் எச்சரிக்கை விடுத்தாா்.
இதைத்தொடா்ந்து, மாநகராட்சி உதவி ஆணையா் வெங்கடேசன் தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்ததுடன், உடனடியாக குப்பைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனா்.
அதன் அடிப்படையில், மாநகராட்சி ஊழியா்கள் வரவழைக்கப்பட்டு குப்பைகள் அங்கிருந்து அகற்றப்பட்டன. இதைத்தொடா்ந்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.