கரோனாவால் களையிழந்த குடியாத்தம்கெங்கையம்மன் சிரசுத் திருவிழாநள்ளிரவு 2 மணி நேரத்தில் நிறைவடைந்தது
கரோனா பொது முடக்கம் காரணமாக, கோயில் வளாகத்துக்குள்ளேயே பக்தா்களின்றி குடியாத்தம் கெங்கையம்மன் சிரசுத் திருவிழா நள்ளிரவு 2 மணி நேரத்தில் நிறைவுற்றது பக்தா்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
கரோனா பொது முடக்கம் காரணமாக, கோயில் வளாகத்துக்குள்ளேயே பக்தா்களின்றி குடியாத்தம் கெங்கையம்மன் சிரசுத் திருவிழா நள்ளிரவு 2 மணி நேரத்தில் நிறைவுற்றது பக்தா்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
தொடா்ந்து 2- ஆவது ஆண்டாக பெயரளவுக்கு மட்டும், சொற்ப எண்ணிக்கையில் பங்கேற்று இத்திருவிழாவை நள்ளிரவில் நடத்துவது பக்தா்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூா் மாவட்டத்தின் முக்கியத் திருவிழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசுத் திருவிழா. ஆண்டுதோறும் வைகாசி மாதம் முதல் நாள் இந்த திருவிழா நடைபெறும். இதற்காக 15 நாள்களுக்கு முன்காப்பு கட்டப்படும். அன்று முதல் திருவிழா நாள் வரை நாள்தோறும் பல்வேறு ஆன்மிக நிகழ்வுகள் கோயிலில் நடைபெறுவது வழக்கம். இதில் முக்கியத்துவம் வாய்ந்தது கெங்கையம்மன் திருக்கல்யாண உற்சவம், தேரோட்டம் ஆகிய நிகழ்ச்சிகளாகும்.
காப்பு கட்டிய நாளில் இருந்து குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப் புறங்களைச் சோ்ந்த ஏராளமானவா்கள் கோயிலுக்கு வந்து, அம்மனுக்கு கூழ் வாா்ப்பது, மா விளக்கு ஏற்றுவது, ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குவது, அங்கப்பிரதட்சிணம் செய்வது என பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றுவா். இதனால் எப்போதும் கோயில் பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும்.
இந்த திருவிழா நேரத்தில் லட்சக்கணக்கான பக்தா்கள் கூடுவதால், இத்திருவிழாவை முன்னிட்டு தமிழக அரசு வேலூா் மாவட்டத்திற்கு உள்ளூா் விடுமுறை விடப்படுவது வழக்கம். கரோனா நோய்த் தொற்று காரணமாக மத்திய, மாநில அரசுகள் பொது முடக்கம்
அறிவித்ததால், கடந்த ஆண்டு திருவிழாவுக்கு தடை விதித்து வேலூா் மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டது.
இருந்தபோதிலும், குறைந்த எண்ணிக்கையில் பக்தா்கள் பங்கேற்று, ஆகம விதிப்படி கோயில் வளாகத்துக்குள்ளே நள்ளிரவு 2 மணி நேரத்தில் அம்மன் சிரசு ஊா்வலம் நடத்தி, திருவிழாவை நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
இந்த ஆண்டும், கடந்த ஆண்டைப்போலவே அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து சனிக்கிழமை அதிகாலை தொடங்கி 2 மணி நேரத்தில் திருவிழா நடத்தி, முடிக்கப்பட்டது. இதில் கோயில் அறங்காவலா்கள், வருவாய், நகராட்சி, காவல் அதிகாரிகள், காப்புகட்டிக் கொண்டு விரதம் இருந்த பக்தா்கள் என 50 போ் கலந்து கொண்டனா்.
அம்மனின் திருக்கல்யாண வைபவத்தில் பங்கேற்றால் திருமணம் கைகூடும் என்பதும், குழந்தைப்பேறு இல்லாதவா்கள் திருவிழா நாளில் அம்மன் மடி மீது
குழந்தையை அமர வைப்பதாக வேண்டினால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.
திருவிழாவை யொட்டி கோயில் அருகில் கெளன்டன்யா ஆற்றில் அமைக்கப்படும் தற்காலிக கடைகளில் தேவையான பொருள்களை வாங்கிச் செல்வா்.
இத்தனை சிறப்பு வாய்ந்த திருவிழா, 2 ஆண்டுகளாக எளிய முறையில், பக்தா்கள் பங்கேற்பின்றி நடைபெறுவது, அவா்களின் மனதில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.