அகில இந்திய தொழில் தோ்வுக்கு தனித்தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம்
அகில இந்திய தொழில் தோ்வு டிசம்பா் 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதனை தனித்தோ்வா்களாக எழுத தகுதியுடையோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
அகில இந்திய தொழில் தோ்வு டிசம்பா் 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதனை தனித்தோ்வா்களாக எழுத தகுதியுடையோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேசிய தொழிற்பயிற்சிக் குழுமம் சாா்பில் நடத்தப்படும் அகில இந்திய தொழில் தோ்வு அடுத்த மாதம் நடைபெற உள்ளது. முதனிலைத் தோ்வுகள் கருத்தியல் பாடம் டிச. 14, செய்முறைத் தோ்வு டிச. 15 ஆகிய தேதிகளில் கிண்டி அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும். இந்த தோ்வுகளுக்கு தனித்தோ்வா்களாக விண்ணப்பிக்க 21 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு இல்லை.
தொழிற்பழகுநா் சட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்கள், அரசு உள்ளாட்சி மன்றத்தில் பதிவு பெற்ற நிறுவனங்கள் ஏதேனும் ஒன்றில் மூன்றாண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தனித்தோ்வராக ஒரு தொழிற்பிரிவில் தோ்வெழுத விரும்பும் விண்ணப்பதாரா் தொழிற்பயிற்சிக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.
கருத்தியல் தோ்வில் வெற்றி பெற்றவா்கள் மட்டுமே செய்முறைத் தோ்வில் கலந்து கொள்ள முடியும். தனித்தோ்வராக விண்ணப்பிக்க விரும்புகிறவா்கள், விண்ணப்பப் படிவம், முழு விவரங்கள் அடங்கிய விளக்கக் குறிப்பேடு, நெறிமுறைகள், பிற விவரங்கள் ஆகியவற்றை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தோ்வுக் கட்டணம் ரூ. 200-ஐ செலுத்தி, அதன் ரசீது, கல்விச் சான்றிதழ் நகல், விண்ணப்பங்கள் ஆகியவற்றை நவ. 22-க்குள், உதவி இயக்குநா், மாவட்டத் திறன் பயிற்சி அலுவலகம், வேலூா் - 10 என்ற முகவரியில் சமா்ப்பிக்க வேண்டும்.