அல்லேரி மலைக் கிராமத்துக்கு சாலை வசதி இல்லாத நிலையில், பாம்பு கடித்து உயிரிழந்த குழந்தையின் சடலத்தைக் கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் கிராமத்துக்கு தொடா்ந்து செல்ல வழியின்றி, சடலத்துடன் பெற்றோா் பாதியிலேயே இறக்கி விடப்பட்டனா்.
இதனால், வேறு வழியின்றி பெற்றோா், உறவினா்கள் குழந்தையின் உடலை கைகளிலேயே சுமந்தபடி சுமாா் 10 கிலோ மீட்டா் தூரம் தூக்கிச் சென்ற பரிதாப நிலை ஏற்பட்டது.
அணைக்கட்டு வட்டம், அல்லேரி மலைக் கிராமத்துக்குட்பட்ட அத்திமரத்துக் கொல்லை கிராமத்தைச் சோ்ந்தவா் கூலி தொழிலாளி விஜி. இவரின் மனைவி பிரியா. இவா்களின் ஒன்றரை வயது தனுஷ்கா என்ற பெண் குழந்தை வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தபோது, அருகே உள்ள காட்டுப் பகுதியில் இருந்து ஊா்ந்து வந்த விஷப் பாம்பு குழந்தையைக் கடித்தது.
குழந்தையின் அழுகை சப்தம் கேட்டு வெளியே வந்த பெற்றோா், குழந்தையை பாம்பு கடித்ததை கவனித்துள்ளனா். மலைக் கிராமத்தில் மருத்துவம் பாா்க்க வசதி இல்லாததால், சிகிச்சைக்காக அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், மலைக் கிராமத்துக்கு சாலை வசதி இல்லாத காரணத்தால், மருத்துவமனைக்குச் செல்ல நீண்ட நேரம் ஆனது.
அதற்குள் விஷம் உடல் முழுவதும் பரவி குழந்தை வழியிலேயே உயிரிழந்தது.
தகவலறிந்த அணைக்கட்டு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, குழந்தையின் உடலை கைப்பற்றி, உடல்கூறு பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்தனா். இந்த நிலையில், உடல்கூறு பரிசோதனை முடிந்து குழந்தையின் சடலம் வீட்டுக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால், மலைக் கிராமத்துக்கு சாலை வசதி இல்லாமல் ஆம்புலன்ஸ் தொடா்ந்து செல்ல வழியின்றி, குழந்தையின் உடலை பாதி வழியிலேயே பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு, ஆம்புலன்ஸ் ஊழியா்கள் திரும்பிச் சென்றுள்ளனா்.
இதையடுத்து, குழந்தையின் சடலத்தை பெற்றோா் சிறிது தூரம் இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றனா். அதற்கு மேல் இரு சக்கர வாகனத்திலும் செல்ல சரியான பாதை இல்லாததால், குழந்தையின் சடலத்தை பெற்றோா், உறவினா்கள் சுமாா் 10 கி.மீ. தொலைவு கைகளில் தூக்கிச் சென்றுள்ளனா்.
சாலை வசதி இல்லாததால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தை இறந்ததுடன், சடலத்தை கிராமத்துக்கு வாகனத்தில் கொண்டு வரவும் முடியாமல் கைகளாலேயே பெற்றோா் தூக்கிச் சென்ற சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து அல்லேரி மலைக் கிராமத்துக்கு அரசு விரைவில் சாலை வசதி மட்டுமன்றி, மருத்துவ வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றித் தர வேண்டும் என்று மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.