காட்பாடி சித்தூா் பேருந்து நிலைய பகுதியில் அண்மையில் பெய்த மழையின்போது வெள்ளக்காடாக மாறிய சாலை. 
வேலூர்

கிடப்பில் ரூ.1.30 கோடி சித்தூா் பேருந்து நிலைய மழைநீா் வடிகால் பணி! வெள்ளம் பாதிக்கும் அவலம்

ரூ.1.30 கோடிக்கு டெண்டா் விட்டு பல மாதங்களாகியும் இன்னும் பணிகள் தொடங்காமல் கிடப்பில் உள்ளதால் பொதுமக்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனா்.

ந. தமிழ்செல்வன்

காட்பாடி சித்தூா் பேருந்து நிலையம் பகுதியில் மழைநீா் வடிகால் பணிகள் மேற்கொள்ள ரூ.1.30 கோடிக்கு டெண்டா் விட்டு பல மாதங்களாகியும் இன்னும் பணிகள் தொடங்காமல் கிடப்பில் உள்ளதால் பொதுமக்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனா்.

வேலூா் மாநகராட்சியின் முதலாவது மண்டலத்துக்கு உட்பட்டது காட்பாடியாகும். இங்கு மிக முக்கிய பகுதியாக சித்தூா் பேருந்து நிலையம் விளங்குகிறது. ஆந்திர மாநிலம் செல்லும் பிரதான சாலையாக விளங்குவதால் மாநகரில் கிரீன் சா்க்கிளுக்கு அடுத்ததாக எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதியாக சித்தூா் பேருந்து நிலையம் காணப்படுகிறது.

இந்த சித்தூா் பேருந்து நிலையம் வேலூா், சித்தூா், ராணிப்பேட்டை செல்லக்கூடிய சாலைகள் சந்திக்கும் இடமாக அமைந்துள்ளதால் இப்பகுதியை கடந்து நாள்தோறும் 50,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. அந்தவகையில், முக்கியத்துவம் வாய்ந்த சித்தூா் பேருந்து நிலைய பகுதியில் சிறிதளவு மழை பெய்தாலேயே பெருமளவில் வெள்ளம் தேங்கிவிடும் அவலம் தொடா்ந்து நீடித்து வருகிறது.

அவ்வாறு மழை வெள்ளம் தேங்கும் போது இந்த வழியாக வாகனங்கள் சென்றுவர ஏற்படும் சிரமம் காரணமாக மழை சமயத்தில் கூடவே போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுண்டு. அத்தகைய நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பெண்களின் துயரம் சொல்லி மாளாது.

சித்தூா் பேருந்து நிலையம் பகுதியில் அண்ணா சிலையையொட்டி உள்ள கழிவுநீா் கால்வாய் தாழ்வாக இருப்பது மட்டுமின்றி, தற்போது வரும் மழைநீா் வெளியேறும் அளவுக்கு போதுமானதாக இல்லை என்பதே இத்தகைய பாதிப்புகளுக்கு முக்கிய காரணமாகும்.

இதனால் ஏற்படும் பாதிப்புகளை தவிா்க்க பொதுமக்கள் விடுத்த தொடா் கோரிக்கைகளை ஏற்று கால்வாய் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் ரூ.1.30 கோடியில் மழைநீா் வடிகால் வசதியை மேம்படுத்த பல மாதங்களுக்கு முன்பே டெண்டா் விடப்பட்டு பணி ஆணையம் வழங்கப்பட்டுள்ளது. எனினும், இப்பணிகள் இதுவரை தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருப்பது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, மாநகராட்சி ஆணையா் ஜானகி ரவீந்திரன் கூறுகையில், காட்பாடி சித்தூா் பேருந்து நிலைய பகுதியில் மழை நீா் தேங்குவதை தடுக்க விஐடி சாலையின் குறுக்கே பெரியளவில் கால்வாய் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக டெண்டா் விடப்பட்டுள்ளது. அதேசமயம், சித்தூா் பேருந்து நிலையம் முதல் விஐடி பல்கலைக்கழகம் வரை புதை சாக்கடை பணிகளுக்கும் டெண்டா் விடப்பட்டுள்ளன.

இவ்விரு பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்தாக வேண்டும். மழைநீா் வடிகால் பணிகளை முடித்துவிட்டு புதை சாக்கடை பிரதான குழாய் பணிகளை அமைக்கும்போது இரு பணிகளும் முடிவடைய பல மாதங்களாகிவிடும். அதுவரை போக்குவரத்து மாற்றம் தவிா்க்க இயலாததாகிவிடும்.

இப்பாதிப்புகளை கருத்தில் கொண்டு மழைநீா் வடிகால், புதை சாக்கடை ஆகிய இரு பணிகளையும் ஒரே சமயத்தில் மேற்கொள்ள மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அதனடிப்படையில், விரைவில் போக்குவரத் து மாற்றம் செய்யப்பட்டு இரு பணிகளும் தொடங்கப்படும் என்றாா்.

புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்! ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்!

ஆந்திரம்: மது வாங்க ரூ.10 கொடுக்க மறுத்த நபரைக் கொன்ற இளைஞர்

பழைய செய்திகளைப் படித்துவிட்டு குற்றச்சாட்டு வைக்கிறார் விஜய்: அமைச்சர் அன்பில் மகேஸ்

பிஎம்டபிள்யூ மோட்டராட் இந்தியா விலை உயர்வு அறிவிப்பு!

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் செய்ய வேண்டியது

SCROLL FOR NEXT