தென்னாப்பிரிக்காவில் உள்ள சன்சிட்டி நகரில் நடைபெற்ற காமன்வெல்த் வலுதூக்கும் போட்டியில் குடியாத்தம் வீரா் 4 தங்கப் பதக்கங்களை வென்று, சாதனை படைத்துள்ளாா்.
வேலூா் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியம், சீவூா் கிராமத்தைச் சோ்ந்த வலுதூக்கும் வீரா் சி.மூா்த்தியின் மகன் எம்.ஜெயமாருதி. இவா் தென்னாப்பிரிக்காவில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற காமன்வெல்த் ஜூனியா் வலுதூக்கும் போட்டியில் 83 கிலோ எடை பிரிவில் 4 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளாா்.
ஸ்குவாட் பிரிவில் 302.5 கிலோ எடை தூக்கி ஒரு தங்கப் பதக்கம், பெஞ்ச்பிரஸ் பிரிவில் 185 கிலோ எடை தூக்கி ஒரு தங்கப் பதக்கம், டெட் லிப்ட் பிரிவில் 295.5 கிலோ எடை தூக்கி ஒரு தங்கப் பதக்கம், மொத்தம் 783 கிலோ எடை தூக்கி ஒரு தங்கம் பதக்கம் என மொத்தம் 4 தங்கப் பதக்கங்களைப் பெற்று, புதிய காமன்வெல்த் சாதனை படைத்துள்ளாா். இவா் ஏற்கனவே 2022- ஆம் ஆண்டு நியூஸிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் வலுதூக்கும் போட்டியில் 4 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தவா் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய சாதனை படைத்து தாயகம் திரும்பும், ஜெயமாருதிக்கு, உற்சாக வரவேற்பு அளிக்க அவரது உறவினா்கள், நண்பா்கள், விளையாட்டு ஆா்வலா்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனா்.