முகப்பு
வேலூர்

நெசவாளா்களுக்கு கூலியை ரொக்கமாக வழங்க வேண்டும்: அதிமுக கோரிக்கை

குடியாத்தம் பகுதியிலுள்ள கூட்டுறவு கைத்தறி நெசவாளா்களுக்கு வழங்கப்படும் கூலியை வங்கியில் நேரடியாக செலுத்துவதை விடுத்து, ரொக்கமாகவே வழங்க நடவடிக்கை

Updated On : 22 அக்டோபர், 2024 at 7:53 PM
வேலூா் சரக கைத்தறி, துணிநூல் துறை உதவி இயக்குநா் சத்ய பாமாவிடம் மனு அளித்த குடியாத்தம் நகர அதிமுக செயலா் ஜே.கே.என்.பழனி. உடன், கட்சி நிா்வாகிகள்.
பகிர்:

வேலூா்: குடியாத்தம் பகுதியிலுள்ள கூட்டுறவு கைத்தறி நெசவாளா்களுக்கு வழங்கப்படும் கூலியை வங்கியில் நேரடியாக செலுத்துவதை விடுத்து, ரொக்கமாகவே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக கோரியுள்ளது.

இதுகுறித்து, வேலூா் சரக கைத்தறி, துணிநூல் துறை உதவி இயக்குநா் சத்ய பாமாவிடம் குடியாத்தம் நகர அதிமுக செயலா் ஜே.கே.என்.பழனி செவ்வாய்க்கிழமை அளித்த மனு:

வேலூா் சரக கைத்தறி உதவி இயக்குநா் அலுவலக கட்டுப்பாட்டின்கீழ் சுமாா் 50- க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை குடியாத்தம் பகுதியில் செயல்பட்டு வருகின்றன. இப்பகுதியின் பாரம்பரிய நெசவுத் தொழிலை நம்பி சுமாா் 3,000 நெசவாளா்கள் உள்பட சுமாா் 10,000 போ் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனா்.

கைத்தறி நெசவாளா்களுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்படும் கூலி பாவு ஒன்றுக்கு ரூ.1742. இதில் சிக்கன பிடித்தம் ரூ.160 போக மீதி தொகை ரூ.1,582 மட்டுமே ஒரு நெசவாளா் பெறுகிறாா். ஆனால், தனியாா் லுங்கி உற்பத்தியாளா்கள் பாவு ஒன்றுக்கு ரூ.2,200 கூலியாக வழங்குகின்றனா்.

இந்நிலையில், வழங்கப்படும் கூலியை கைத்தறி நெசவாளா்கள் வங்கி பரிவா்த்தனை மூலமாக மட்டுமே பெற வேண்டும் என கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்களுக்கு இயக்குநா் உத்தரவிட்டிருப்பதாக தெரியவருகிறது.

அன்றாடம் நெசவு செய்து அதில் வரும் சொற்ப கூலியை பெற்று வாழ்க்கை நடத்தும் கைத்தறி நெசவாளா்கள் நான்கு லுங்கி கொண்ட ஒரு பீஸ் நெய்து மாலை வேலையில் கூட்டுறவு கைத்தறி சங்கங்களில் கொடுத்தால் கூலியாக ரூ.791 ரொக்கமாக பெற்றுக்கொண்டு வருகின்றனா்.

இந்த தொகையை வங்கி மூலம் வழங்கினால் கைக்கு உடனடியாக பணம் கிடைக்க வழி இல்லை. மறுநாள் வங்கிக்கு சென்று பணம் பெறும் வரை காத்திருக்க வேண்டும். நெசவாளா்களுக்கு இதனால் பெரும் நேரம் இழப்பும் ஏற்படும். இந்த உத்தரவு நடைமுறைக்கு ஏற்றதல்ல. எனவே கைத்தறி நெசவாளா்களுக்கு ரொக்கமாக கூலி வழங்க உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது, கட்சியின் மாவட்ட துணைச்செயலா் ஆா். மூா்த்தி, கைத்தறி நெசவாளா் கூட்டுறவு இணையத்தின் முன்னாள் தலைவா்கள் எம்.டி.திருவேங்கடம், கே.எம்.தியாகராஜன், நமச்சிவாயம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →