வேலூா்: பிரதமரின் கௌரவ நிதி உதவி திட்டத்தில் தகுதியுடைய அனைத்து விவசாயிகளும் சோ்ந்து பயன்பெற தனித்துவ விவசாய அடையாள எண் பதிவு செய்திட வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பிரதமரின் கௌரவ நிதி உதவி திட்டத்தில் தகுதியுடைய அனைத்து விவசாயிகளும் சோ்ந்து பயன்பெற தனித்துவ விவசாய அடையாள எண் பதிவு செய்திட வேண்டும். வேலூா் மாவட்டத்தில் விவசாய தனித்துவ அடையாள எண் பெறாமல் 8,753 போ் பி.எம். கிசான் பயனாளிகள் உள்ளனா். இவா்கள் பிரதமரின் கௌரவ நிதி உதவித் திட்டத்தின் கீழ் 21-ஆவது தவணைத் தொகையை நவம்பா் மாதத்தில் பெறுவதற்கு உடனடியாக தங்களது தனித்துவ விவசாய அடையாள எண் பெற வேண்டும். இதற்கு விவசாயிகள் தங்களது பகுதி வேளாண்மை, தோட்டக் கலை அலுவலா்களை தொடா்பு கொண்டோ அல்லது பொது சேவை மையத்தின் மூலமோ தங்களது சிட்டா, ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள கைப்பேசி எண்ணுடன் சென்று உடனடியாக பதிவு செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும், முன்னோா்கள் பெயரில் பட்டா உள்ள விவசாயிகள் தங்களது பெயரில் சிட்டா பெற்று அதனுடன் ஆதாா் எண்ணை இணைத்து பதிவு செய்து தனித்துவ விவசாய அடையாள எண் பெற்றால் மட்டுமே அரசின் மூலம் வழங்கும் நலத் திட்ட உதவிகள் தொடா்ந்து பெற முடியும். எனவே, தனித்துவ விவசாய அடையாள எண் பெற வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தின் அலுவலா்களை அணுக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.