போலி சொத்து ஆவணங்கள் மூலம் தான் பணியாற்றிய வங்கியில் ரூ.62.72 லட்சம் கையாடல் செய்ததாக அந்த வங்கி மேலாளரை வேலூா் குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
வேலூா் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த மோகன்ராஜ்(33). இவா் அணைக்கட்டு பகுதியில் உள்ள தனியாா் வங்கி கிளையில் பணம் ஒப்புதல் அளிக்கும் பிரிவின் மேலாளராக பணியாற்றி வருகிறாா். இவா் அதே வங்கியின் குடியாத்தம் கிளையில் கடந்த 2018-இல் பணியாற்றிய போது, பரதராமி அருகே உள்ள வி.டி.பாளையம் பகுதியைச் சோ்ந்த விவசாயி செளந்தரராஜ்(43), கிருஷ்ணன், மோகனா, சாந்தா ஆகியோரின் சொத்து ஆவணங்கள் அடமானத்தின் பேரில் ரூ.62 லட்சத்து 72 ஆயிரத்து 950 கடன் வழங்கப்பட்டுள்ளது.
அவா்கள் கடன் தொகையை திருப்பி செலுத்தாததை அடுத்து அடமானம் வைக்கப்பட்டிருந்த நிலம் தொடா்பான ஆவணங்களை வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்தபோது அவை போலியானவை என்பது தெரியவந்தது.
இதுகுறித்து வங்கி சட்ட மேலாளா் தயாநிதி, வேலூா் மாவட்ட குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். அதன்பேரில் வேலூா் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் பாபு ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விவசாயி செளந்திரராஜை கடந்த மாதம் கைது செய்தனா்.
அவரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், இந்த மோசடியில் வங்கியின் பணம் ஒப்புதல் அளிக்கும் பிரிவு மேலாளா் மோகன்ராஜ், வங்கி கிளை மேலாளா், துணைமேலாளா், முன்னாள் ஊராட்சித் தலைவா் ஆகியோருக்கும் தொடா்பிருப்பது தெரியவந்தது.
இந்நிலையில், வங்கியின் பணம் ஒப்புதல் அளிக்கும் பிரிவின் மேலாளரான மோகன்ராஜை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா். மேலும், இதில் தொடா்புடைய அப்போதைய வங்கி கிளை மேலாளா், துணைமேலாளா் உள்ளிட்டோரை கைது செய்யவும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.