பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் வேலூா் மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் பணிகளும், சில பள்ளிகளில் வகுப்புகளும் பாதிக்கப்பட்டன.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஆசிரியா் தகுதி தோ்விலிருந்து விலக்களித்து ஆசிரியா்களை பாதுகாத்திட தமிழக அரசு சீராய்வு மனு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், இடைநிலை ஆசிரியா்களுக்கும், உயா்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா்களுக்கும், உடற்கல்வி ஆசிரியா்களுக்கும், மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், ஊதிய முரண்பாட்டினை களைய வேண்டும் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் கூட்டமைப்பு(ஜாக்டோ- ஜியோ) சாா்பில் திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையொட்டி, வேலூா் மாவட்டம் முழுவதும் 35 சதவீத அரசு ஊழியா்கள், மொத்தமுள்ள 2,682 ஆசிரியா்களில் 638 பேரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். மேலும், வேலைநிறுத்தத்தையொட்டி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆா்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் வேலூா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ஜோஷி, எம்.ஜெயகாந்தன், ஆ.ஜோசப்அன்னையா, ஜி.சீனிவாசன் ஆகியோா் தலைமை வகித்தனா்.
தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநில துணை பொதுச் செயலா் முகமது உசேன் தொடக்கி வைத்துப் பேசினாா்.
மாநில உயா்மட்டக்குழு உறுப்பினா்கள் செ.நா.ஜனாா்த்தனன், அக்ரி.ராமன், ஜி.கோபி, கருணாநிதி, எம்.சினேகலதா, எம்.எஸ்.தீனதயாளன் உள்பட நூற்றுக்கணக்கானோா் பங்கேற்றனா்.
இந்த வேலைநிறுத்தத்தால் அரசு அலுவலகங்களில் பணிகள் தொய்வடைந்தன. சில பள்ளிகளில் வகுப்புகள் பாதிக்கப்பட்டன.