முகப்பு
கோயம்புத்தூர்

பட்டா கிடைத்தும் பலனில்லை: வஞ்சிக்கப்படும் ஏழைக் குடும்பங்கள்!

திருப்பூர், நவ.13: பல்வேறு பிரச்னைகள் நிறைந்த அரசு புறம்போக்கு நிலத்தில் ஏழை மக்களுக்கு இலவச பட்டா வழங்கப்பட்டதால் தற்போது அங்கு எவ்வித அடிப்படை வசதிகளும் செய்துதர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்,

Updated On : 20 செப்டம்பர், 2012 at 8:48 PM
பகிர்:
Updated On : 27 டிசம்பர், 2023 at 11:41 PM

திருப்பூர், நவ.13: பல்வேறு பிரச்னைகள் நிறைந்த அரசு புறம்போக்கு நிலத்தில் ஏழை மக்களுக்கு இலவச பட்டா வழங்கப்பட்டதால் தற்போது அங்கு எவ்வித அடிப்படை வசதிகளும் செய்துதர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்காமல் சுமார் 300 குடும்பத்தினர் வஞ்சிக்கப்படுகின்றனர்.

 திருப்பூரை அடுத்த வீரபாண்டி ஊராட்சி 1வது வார்டுக்கு உட்பட்ட ஜனசக்தி நகரில்  4.59 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் கடந்த 1989ம் ஆண்டு 167 ஏழை குடும்பங்கள் வீடுகள் கட்ட பிரித்து பட்டா வழங்கப்பட்டது. அதன்படி, அக்குடும்பங்கள் அந் நிலத்தில் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். ஆனால், அந் நிலத்தின் மீது தனியார் ஒருவர் மேற்கொண்ட நீதிமன்ற வழக்கு காரணமாக சுமார் 20 ஆண்டுகளாக அப்பகுதியில் மின்சாரம், சாக்கடை, சாலை, குடிநீர், பொதுக்கழிப்பிடம் என எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படாமல் இருந்தது.

 இதனால், அப்பகுதி மக்கள் அடைந்த பாதிப்பை அடுத்து வீரபாண்டி ஊராட்சி நிர்வாகம் நீதிமன்ற விதிகளுக்கு உட்பட்டு ஜனசக்தி நகர் குடியிருப்புகளுக்கு மின்சாரம், தெருவிளக்கு, கான்கிரீட் சாலை, சாக்கடை வசதி, பொதுக்கழிப்பிடம் அமைக்கும் பணிகளை மேற்கொண்டது. தவிர, இந்திராகாந்தி நினைவு குடியிருப்புத் திட்டத்தின் மூலம் தொகுப்பு வீடுகள் கட்டவும் அப்பகுதியிலுள்ள 27 ஏழைக் குடும்பங்களுக்கு முதற்கட்ட நிதி பெற்றுத்தரப்பட்டது.

Advertisement

 அதனடிப்படையில், அடிப்படை வசதிகள், தொகுப்பு வீடுகள் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் நீதிமன்றத் தடையாணை பெறப்பட்டதால் அனைத்துப் பணிகளும் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. இதையடுத்து ஜனசக்தி நகரில் மேற்கொள்ளப்பட்டு வந்த கான்கிரீட் சாலை, சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும், அடுத்த கட்ட நிதிகிடைக்காமல் தொகுப்பு வீடுகளின் கட்டுமான பணிகளும் அரைகுறையாக நிற்கின்றன.

 இதனால், கனமழை பெய்யும்போது மக்கள் சொல்லொண்ணா துயரத்திற்கு உள்ளாகின்றனர். கட்டுமானப் பணிகள் முழுமையாக முடிந்த நிலையில் கழிவுநீர் செல்லவதற்கான பணிகள் செய்ய முடியாததால் அங்கு கட்டப்பட்டுள்ள பொதுக்கழிப்பிடத்தையும் மக்கள் பயன்படுத்த முடியாமல் வீணாகிக் கொண்டுள்ளது. ஆங்காங்கே பாதியில் நிறுத்தப்பட்ட அடிப்படைப் பணிகளால் தற்போது அப்பகுதியில் குடியிருக்கும் சுமார் 300 குடும்பத்தினர்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.

 இதுகுறித்து வீரபாண்டி ஊராட்சித் தலைவர் ஏ.கோவிந்தராஜ் கூறுகையில்,

தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு அரசு கொடுத்த நிலப் பிரச்னை தொடர்பாக வருவாய்த்துறை சார்பில் நீதிமன்றத்தில் சான்றுகள் சமர்பிக்கும்பட்சத்தில் இவ்வழக்கு  முடிவுக்கு வரும். ஆனால், அதற்கான சான்றுகளை நீதிமன்றத்தில் சமர்பிக்க வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர்ந்து தாமதம் செய்கின்றனர்.

 இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் உள்பட பல்வேறு துறை அலுவலர்களுக்கும் தொடர்ந்து பலமுறை வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், இவ்வழக்கு முடிவுக்கு வரவில்லை. பட்டா

பெற்ற ஏழைக் குடும்பங்கள் அடிப்படை வசதிகள் கிடைக்காமல் தவிக்கின்றனர்.

 இப் பிரச்னையில் அரசு சிறப்புக் கவனம் செலுத்தி அவ்வழக்கை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவதுடன், பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தர வேண்டும் என்றார்.

 அரசு பட்டா கொடுக்கும் முன்பாக அந்நிலத்தின் மீதான பிரச்னைகளை ஆராய்ந்து எவ்வித வில்லங்கமும் இல்லாத நிலங்களை ஏழை மக்களுக்கு அளிக்க வேண்டும்.  பல்வேறு பிரச்னைகள் நிறைந்த நிலங்களை அளிப்பதன் மூலம் ஜனசக்தி நகரைப் போன்று ஆண்டுக்கணக்கில் ஏழை மக்கள் அவதிக்குள்ளாக வேண்டிவரும்.

 இப் பிரச்னை மீது அரசு கவனம் செலுத்தி அப்பகுதி மக்களின் அமைதியான வாழ்க்கைக்கு வழிவகை செய்ய வேண்டும் என்பதே சமூகநல ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.