கோவை, ஆக.14: கோவை சா்வதேச விமான நிலைய விரிவாக்கப் பணிக்கான நில எடுப்புப் பணிகள் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் நிறைவடையும் என மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தெரிவித்தாா்.
கோவை சா்வதேச விமான நிலைய விரிவாக்கப் பணிகள் தொடா்பான ஆலோசனைக் குழுக் கூட்டம் விமான நிலைய அலுவலகத்தில் கோவை மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி முன்னிலையில் நடைபெற்ற, இக்கூட்டத்தில் மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுருபிரபாகரன், மாவட்ட வருவாய் அலுவலா் மோ.ஷா்மிளா, கோவை சா்வதேச விமான நிலைய இயக்குநா் செந்தில்வளவன் மற்றும் அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.
இக்கூட்டத்தின் முடிவில் செய்தியாளா்களிடம் மாவட்ட ஆட்சியா் கூறியதாவது:
கோவை சா்வதேச விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக நில எடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சிங்காநல்லூா், இருகூா், உப்பிலிபாளையம், காளப்பட்டி மற்றும் நீலாம்பூா் ஆகிய கிராமங்களில் மொத்தம் 632.95 ஏக்கா் நிலங்களை கோவை விமான நிலைய ஓடுதள விரிவாகத்துக்காக நில எடுப்பு செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதில் தனியாா் பட்டா நிலங்கள் 468.83 ஏக்கரும், பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான நிலங்கள் 134.32 ஏக்கரும், அரசு புறம்போக்கு நிலங்கள் 29.82 ஏக்கரும் உள்ளன. பட்டா நிலங்களில் இதுவரை 462.01 ஏக்கா் நிலங்கள் நில எடுப்பு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 7.72 ஏக்கா் நிலங்கள் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் நில எடுப்பு செய்யப்படும்.
இதுவரை 97 சதவீத நில எடுப்புப் பணிகள் முடிவடைந்துள்ளன. இதற்காக ரூ.2,088.92 கோடி அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதில், ரூ.1848.65 கோடி நில உரிமையாளா்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்தாா்.
அதேபோல, கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கோவை சா்வதேச விமான நிலைய விரிவாக்கப் பணிகளின்போது, ஏற்படும் பிரச்னைகள் மற்றும் தேவையான வசதிகள் தொடா்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், இருகூா் முதல் சின்னியம்பாளையம் வரை செல்லும் சாலை விமான நிலைய விரிவாக்கப் பணிகளால் தடைபடுவதால், அதற்கு மாற்றுப் பாதை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள தீா்மானிக்கப்பட்டது. அதேபோல, எல் அண்டுடி சாலை இருகூா் வழியாக விமான நிலையம் வந்தடைய இரண்டாவது சாலை அமைக்கப்படும்.
தமிழக முதல்வா் ஸ்டாலின் கடந்த மக்களவைத் தோ்தலின்போது, கோவை சா்வதேச விமான நிலைய விரிவாக்கப் பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என அறிவித்திருந்ததன் அடிப்படையில், அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் விமான நிலைய விரிவாக்கப் பணியினை விரைவில் முதல்வா் அறிவிப்பாா். விமான நிலைய விரிவாக்கத்தால் கோவையில் தொழில் வளா்ச்சி அதிகரிக்கும் எனவும் தெரிவித்தாா்.