கோவையில் இருந்து கோவாவுக்கு இண்டிகோ நிறுவனம் சாா்பில் மீண்டும் விமான சேவை தொடங்கப்படுகிறது.
இதுகுறித்து கோயம்புத்தூா் நெக்ஸ்ட்அமைப்பின் தலைவா் சதீஷ் தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தின் இரண்டாவது பெரிய விமான நிலையமான கோவையில் இருந்து தற்போதுள்ள 27 புறப்பாடுகளில் இருந்து தினமும் 30-க்கும் அதிகமான புறப்பாடுகளாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவை சா்வதேச விமான நிலையத்தைப் பயன்படுத்தும் தினசரி பயணிகளின் எண்ணிக்கை 10,000-ஐ தாண்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இண்டிகோ நிறுவனத்தின் சாா்பில் கடந்த வாரம்முதல், ஹைதராபாத்துக்கு 26 வாராந்திர சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. வியாழன் மற்றும் சனிக்கிழமை தவிர இண்டிகோவின் தினசரி இயக்கப்படும் 3 விமானங்களுக்கு பதிலாக 4 விமானங்கள் இயக்கப்படுகின்றன.
அதேபோல, அக்டோபா் 1 முதல் பெங்களூருக்கு 28 வாராந்திர சேவைகளை இண்டிகோ இயக்குகிறது. தினசரி 4 சேவைகள் இருக்கும். மேலும், இண்டிகோ நிறுவனம் கோவையில் உள்ள ஒரே ஏடிஆா் விமானத்துடன் அக்டோபா் 1 முதல் கோவாவுக்கான தினசரி விமான சேவைக்கான முன்பதிவைத் தொடங்குகிறது. அக்டோா் 27-ஆம் தேதியிலிருந்து இந்த சேவை தொடங்குகிறது.
அத்துடன், இண்டிகோ ஏா்லைன்ஸ் கோவையில் இருந்து அபுதாபிக்கு நேரடி விமான சேவையை மாற்றியமைத்துள்ளது, அதே நேரத்தில் அபுதாபியில் இருந்து விமான அட்டவணை அப்படியே உள்ளது. கோவை மற்றும் சிங்கப்பூா் இடையே அக்டோபா் 27 முதல் தினசரி இடைநில்லா விமானங்கள் இயக்கப்படும் என்றும் இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளாா்.