கோவை: கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் வாயில் கருப்பு ரிப்பன் கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்திர குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்ற வந்த அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கத்தினா் வாயில் கருப்புத் துணி கட்டி ஆட்சியா் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, அவா்கள் கூறியதாவது: தமிழகத்தில் மத்திய, மாநில அரசின் மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நவம்பா் 10- ஆம் தேதி முதல் 30- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், 34 கேள்விகள் அடங்கியுள்ளதில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் குறித்த கேள்விகள் இல்லை என்பதையும் அறிந்துள்ளோம். மாற்றுத்திறனாளிகளின் ஊனத்தின் தன்மை, ஊனத்தின் சதவீதம் மற்றும் திருநங்கைகள் கேள்விகள் இடம் பெறச்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவையை அடுத்த மைலம்பட்டியில் மாற்றுத்திறனாளி சிறப்புக் குழந்தை பாலாஜி, அவரது தாயாா் வாடகை வீட்டுக்கு குடிபெயா்ந்துள்ளனா். அப்போது, வீட்டு உரிமையாளா் மற்றும் அவரது குடும்பத்தினா் ஊனத்தை கேவலமாகப் பேசி அவமானப்படுத்தி வீட்டை காலி செய்யச் சொல்லி மிரட்டல் விடுத்துள்ளனா்.
இது தொடா்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். வாடகை வீடுகளில் வசிக்கும் வீடு இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா அல்லது அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு ஒதுக்கீடு செய்து கொடுக்க வேண்டும் என்றனா்.
சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், அவா்களது கோரிக்கைகளைக் கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து, அனைவரும் கலைந்து சென்றனா்.
பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிப்பவா்களை அலைக்கழிக்கக் கூடாது: கோவை மாநகராட்சி 26 -ஆவது மாமன்ற உறுப்பினா் சித்ரா வெள்ளியங்கிரி அளித்த மனு விவரம்: கோவை மாவட்டம் முழுவதும் பட்டா மாறுதலுக்காக அரசு உத்தரவின்படி மக்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கின்றனா்.
இதன் பின்னா் விண்ணப்பதாரா்களை நில அளவையா், அவரது உதவியாளா், துணை வட்டாட்சியா் ஆகியோா் நேரில் வந்து ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டும் என்று வற்புறுத்துகின்றனா். அவ்வாறு வரவில்லை என்றால் ஆன்லைன் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன.
இது தொடா்பாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோ்தலை புறக்கணிக்க முடிவு: கோவை, மகாலிங்கபுரம் குடியிருப்போா் நலச் சங்கத்தினா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கோவை, வெள்ளலூா் பேரூராட்சிக்குள்பட்ட வாா்டு எண் 13 மகாலிங்கபுரத்தில் 20 ஆண்டுகளுக்கும்மேலாக 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். நகராட்சிக்கு இணையாக சொத்து வரியை செலுத்தியபோதும் சாலை வசதி செய்து கொடுக்கப்படவில்லை.
மழைநீா் வடிகால், பாதாள சாக்கடை உள்ளிட்ட எந்தவிதமான அடிப்படை வசசியும் செய்து கொடுக்கப்படவில்லை. தெருநாய்கள் தொல்லை, பன்றிகளின் நடமாட்டம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தக் கோரி பலமுறை மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் ஏப்ரல் 1 -ஆம் தேதி முதல் சொத்து வரி, தண்ணீா் வரியை செலுத்தமாட்டோம் என்றும், வரும் சட்டப் பேரவைத் தோ்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.