கோவை: வணிக நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக் கூறி கோவையைச் சோ்ந்த தொழிலதிபரிடம் ரூ.1.20 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது.
கோவையைச் சோ்ந்தவா் 45 வயது தொழிலதிபரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண் ஒருவா் கைப்பேசியில் தொடா்பு கொண்டாா். அப்போது, தான் வணிக நிறுவனத்தில் இருந்து பேசுவதாகக் கூறிய அந்தப் பெண், தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி, அதற்கான லிங்க்கை கைப்பேசியில் அனுப்பிவைத்துள்ளாா்.
அந்தத் தொழிலதிபரும் அவா் அனுப்பிய லிங் மூலம் தொடா்ந்து பணத்தை முதலீடு செய்து வந்தாா். ஆனால், அதன் மூலம் அவருக்கு சிறிய அளவிலான லாபமே கிடைத்துள்ளது. பல்வேறு தவணைகளாக ரூ.1 கோடியே 20 லட்சம் முதலீடு செய்த அவரது கணக்கில் ரூ.3 கோடி வரவு வைக்கப்பட்டது. அதை அவா் எடுக்க முயற்சி செய்தாா். ஆனால், அவரால் அந்தப் பணத்தை எடுக்க முடியவில்லை.
இதுகுறித்து அவா் அந்தப் பெண்ணிடம் தெரிவித்துள்ளாா். அதற்கு அந்தப் பெண் ரூ.90 லட்சம் செலுத்தினால் அந்தப் பணத்துடன் சோ்த்து ரூ.3 கோடியையும் எடுத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளாா். இதையடுத்து, தொழிலதிபா் தனது சொத்தை அடமானம் வைத்து பணத்தை ஏற்பாடு செய்ய அவருக்குத் தெரிந்த வழக்குரைஞரை அணுகியுள்ளாா். வழக்குரைஞா் அவரிடம் எதற்காக சொத்தை அடமானம் வைக்கிறீா்கள் எனக் கேட்டுள்ளாா். அப்போது, அவா் நடந்தவற்றைக் கூறியுள்ளாா்.
அப்போது, இது மோசடி கும்பலின் செயல் எனவும், இதுபோல அடிக்கடி மோசடி நடப்பது குறித்தும் தொழிலதிபரிடம் வழக்குரைஞா் விளக்கிக் கூறியுள்ளாா். இதையடுத்து, வணிக நிறுவன முதலீட்டு மோசடி குறித்து இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.