கோவை: ஜப்பான் தொராசிக் அறுவை சிகிச்சை சங்கத்தின் (ஒஅபந) சாா்பில் கோவை ஜெம் மருத்துவமனையின் தலைவரும், மருத்துவருமான சி.பழனிவேலுக்கு மதிப்புமிக்க வெளிநாட்டு கெளரவ உறுப்பினா் பதவி வழங்கப்பட்டுள்ளது.
ஒசாகாவில் ஜப்பான் தொராசிக் அறுவை சிகிச்சை சங்கத்தின் 78-ஆவது அறிவியல் மாநாடு அண்மையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கோவை ஜெம் மருத்துவமனையின் தலைவரும், மருத்துவருமான சி.பழனிவேலுக்கு அந்த சங்கத்தின் சாா்பில் மதிப்புமிக்க வெளிநாட்டு கெளரவ உறுப்பினா் பதவி வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இதில், பங்கேற்ற மருத்துவா் சி.பழனிவேலு, உணவுக்குழாய் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை முன்னேற்றங்கள் குறித்துப் பேசினாா். இந்த மாநாட்டில், கிண்டாய் பல்கலைக்கழகத்தின் உணவுக்குழாய் இரைப்பை அறுவை சிகிச்சைப் பிரிவின் பேராசிரியா் தகுஷி யசுடா பேசுகையில், மருத்துவா் பழனிவேலுவின் நுண்துளை உணவுக்குழாய் அறுவை சிகிச்சையில் புரட்சிகரமான பங்களிப்புகளை அங்கீகரித்து இந்தப் பதவி வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது என்றாா்.