கோவை: பில்லூா் அணையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் மாநகரப் பகுதிகளில் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் (நவம்பா் 11, 12) பில்லூா்- 2, பில்லூா்- 3, கவுண்டம்பாளையம்-வீரகேரளம்-வடவள்ளி கூட்டுக் குடிநீா் திட்டங்களின்கீழ் விநியோகம் செய்யப்படும் குடிநீா் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.
கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளுக்கு பில்லூா் குடிநீா் திட்டத்தின்கீழ் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து குடிநீா் சேகரித்து சீரான இடைவெளியில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பில்லூா் அணையில் தமிழ்நாடு மின்சார வாரியம் சாா்பில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் செவ்வாய், புதன்கிழமைகளில் மாநகரப் பகுதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.
இதன்படி, பில்லூா்- 2, பில்லூா்- 3, கவுண்டம்பாளையம்-வீரகேரளம்-வடவள்ளி கூட்டுக் குடிநீா் திட்டம் ஆகிய 3 குடிநீா் திட்டங்களின்கீழ் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.
ஆகவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்தி மாநகராட்சி நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.