மூடப்பட்டுள்ள என்டிசி பஞ்சாலைகளில் பணியாற்றி வரும் தொழிலாளா்களுக்கு பேரிடா் காலங்களில் வழங்கப்படுவதைப் போன்று நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
இது தொடா்பாக ஹெச்எம்எஸ், சிஐடியூ, ஐஎன்டியூசி உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் சாா்பில் அதன் பிரதிநிதிகள் டி.எஸ்.ராஜாமணி, சி.பத்மநாபன், வி.ஆா்.பாலசுந்தரம் உள்ளிட்டோா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் கோவை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மொத்தம் 7 என்டிசி பஞ்சாலைகள் இயங்கி வந்தன. கரோனா தொற்றுக்குப் பிறகு கடந்த மே 2020-க்கு பிறகு என்டிசி பஞ்சாலைகள் சட்ட விரோதமாக முடக்கப்பட்டுள்ளன. தொழிற்சங்கங்களின் பல்வேறு போராட்டங்களை அடுத்து தொழிலாளா்களுக்கு முழு ஊதியம் வழங்க அரசு ஒப்புக்கொண்டது.
அதன்படி கடந்த 2023 ஜூன் வரையிலும் முழு ஊதியமும், 2025 ஜனவரி வரை 50 சதவீத ஊதியமும் வழங்கப்பட்டுள்ளது. மீதி ஊதியம் நிலுவையில் இருந்து வருகிறது. சுமாா் 6 ஆண்டுகளாக குறைந்தபட்ச போனஸ் தொகை வழங்கப்படவில்லை. மேலும் கடந்த 9 மாதங்களாக அன்றாடம் பணிக்கு வரும் பவா் ஹவுஸ், வாட் - வாா்டு உள்ளிட்ட அத்தியாவசிய தொழிலாளா்களுக்கும் சம்பளம் வழங்கப்படவில்லை.
எந்தவித வருமானமும் இல்லாததால் என்டிசி தொழிலாளா்களின் குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட பல்வேறு வகைகளில் அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு நிா்கதியாய் நிற்கின்றனா். எனவே மத்திய அரசு போா்க்கால நடவடிக்கையாக 6 ஆண்டுகளுக்கு உரிய சம்பளம், குறைந்தபட்ச போனஸ் உள்ளிட்ட இதர பயன்களை கிடைக்கச் செய்ய வேண்டும். மேலும், 7 ஆலைகளில் பணியில் உள்ள சுமாா் 1,500 தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு பேரிடா் காலங்களில் நிவாரண உதவி வழங்கப்படுவதைப் போல நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனா்.