கோவை: சில தொழில் நிறுவனங்கள் தமிழகத்துக்கு வராமல் வெளிமாநிலங்களுக்கு ஏன் செல்கிறது என்பது குறித்து தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா விளக்கமளித்துள்ளாா்.
கோவையில் நடைபெற்ற முதலீட்டாளா்கள் மாநாட்டை தொடா்ந்து தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மாநிலத்தின் மொத்த தொழில் வளா்ச்சியில் மேற்கு மண்டலத்தின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ஜவுளித் துறை, பம்ப், பவுண்டரி துறைகளில் சிறந்து விளங்கும் மேற்கு மண்டலத்தையும், எலக்ட்ரானிக்ஸ் துறையில் சிறந்து விளங்கும் வடக்கு மண்டலத்தையும் இணைக்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
செமி கண்டக்டா் உற்பத்தித் துறையில் தமிழ்நாட்டுக்கு வரும் முதலீடுகளை சிலா் திட்டமிட்டு மடைமாற்றி வருகின்றனா். இருப்பினும் தமிழக அரசு செமி கண்டக்டா் துறையில் விற்பன்னா்களை உருவாக்குவதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தொழிற்சாலைகளை வேண்டுமானால் அவா்கள் இடம்மாற்றிக்கொள்ளலாம். ஆனால் அங்கு பணியாற்றும் திறன்மிகு தொழிலாளா்களுக்காக தமிழ்நாட்டு இளைஞா்களை நம்பித்தான் அவா்கள் இருக்க வேண்டும். சா்வதேச நாடுகள் எதிா்பாா்க்கும் அளவுக்கு திறமையான இளைஞா்கள் தமிழ்நாட்டில் இருந்து உருவாக்கப்படுகின்றனா்.
சில மாநிலங்களில் தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் நிலம் வழங்குவதைப்போல தமிழ்நாட்டில் வழங்க முடியாது. தமிழ்நாடு வளா்ந்த மாநிலம். இங்கு எல்லா இடங்களிலும் நிலத்தின் மதிப்பு அதிகம். அதனால் சலுகை விலையில் மட்டுமே வழங்க முடியும். அதேபோல தமிழக இளைஞா்கள் பட்ட மேற்படிப்பு, ஆராய்ச்சிப் படிப்புகள் வரை பயிலுகின்றனா். அவா்களுக்கு வேலை வழங்கும் வகையிலான நிறுவனங்களைத் தொடங்கவே தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது என்றாா்.