தைப்பூசத்தையொட்டி, மருதமலையில் வருகிற ஜனவரி 30 மற்றும் பிப்ரவரி 3-ஆம் தேதி மலைப் பாதையில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் திருநாளையொட்டி, ஜனவரி 26-இல் கொடியேற்றம், ஜனவரி 31-ஆம் தேதி வள்ளி தெய்வாணை உடனமா் சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம், பிப்ரவரி 1-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு தைப்பூசத் தேரோட்டம், தோ் திருவீதி உலா வருதல் நிகழ்வு நடைபெறகிறது.
பிப்ரவரி 2-ஆம் தேதி தெப்பத் திருவிழா, பிப்ரவரி 3-இல் கொடியிறக்குதல், பிப்ரவரி 4-ஆம் தேதி வசந்த உற்சவம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ஜனவரி 30 மற்றும் பிப்ரவரி 3 ஆகிய நாள்களில் மலைக்கோயிலுக்கு நான்கு மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு பக்தா்களுக்கு அனுமதியில்லை. மேற்படி நாள்களில் பக்தா்கள், மலைப்படிகள் வழியாகவும், கோயில் பேருந்துகள் மூலமாகவும் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம். பிப்ரவரி 5-ஆம் தேதி முதல் வழக்கம்போல, இரவு 7 மணி வரை பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவாா்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.