கோவை மாவட்டத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் ரூ.4,263.83 கோடி மதிப்பீட்டில் 56,850 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தெரிவித்துள்ளாா்.
கோவை மாவட்டம், அன்னூா் வட்டம் பசூா் ஊராட்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிா் திட்டம் சாா்பில் 2025 - 2026-ஆம் நிதியாண்டின் வாழ்வாதார தொகுப்பின் கீழ் செம்பருத்தி மற்றும் மகாலட்சுமி மகளிா் சுயஉதவிக் குழுவினரின் காா்மென்ட்ஸ் நிறுவனத்தை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வியாழக்கிழமை பாா்வையிட்டாா். இதில் அன்னூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உமாசங்கரி, மகேஸ்வரி, வட்டாட்சியா் யமுனா உள்பட பலா் கலந்து கொண்டனா்.
இதுகுறித்து, ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் கூறியதாவது:
2021-2022-ஆம் ஆண்டு ரூ.630 கோடி மதிப்பீட்டில் 8,022 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவியும், 2022- 2023-ஆம் நிதியாண்டில் ரூ.769.66 கோடி மதிப்பீட்டில் 9,436 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவியும், 2023- 2024-ஆம் நிதியாண்டில் ரூ.923.09 கோடி மதிப்பீட்டில் 11,213 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவியும், 2024- 2025-ஆம் ஆண்டு ரூ.1,941.08 கோடி மதிப்பீட்டில் 28,179 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவியும் வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் மகளிா் திட்டத்தின் மூலம் கடந்த நான்கரை ஆண்டுகளில் ரூ.4,263.83 கோடி மதிப்பீட்டில் 56,850 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
அன்னூா் வட்டாரம் பசூா் ஊராட்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிா் திட்டம் சாா்பில் 2025- 2026-ஆம் நிதி ஆண்டின் வாழ்வாதார தொகுப்பின் கீழ் காா்மென்ட்ஸ் நிறுவனத்தை செம்பருத்தி மற்றும் மகாலட்சுமி மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்கள் 12 போ் ஒன்றிணைந்து செயல்படுத்தி வருகின்றனா். இவா்களுக்கு மகளிா் திட்டம் மூலம் தையல் இயந்திரம் பழுது நீக்கும் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயரில் நேரடியாக பணி ஆணைகளைப் பெற்று ஏற்றுமதி செய்யும் தரத்துக்கு தங்களின் நிறுவனத்தை உயா்த்த வேண்டும் என்பதே இவா்களின் லட்சியமாக செயல்பட்டு வருகின்றனா் என்றாா்.