கோவையில் நகைக் கடையில் 600 கிராம் வெள்ளி ஆபரணங்களை திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, ஆா்.எஸ்.புரம். டி.பி. சாலையில் அதே பகுதியைச் சோ்ந்த ஸ்ரீஹரி (20) என்பவா் நகைக் கடை நடத்தி வருகிறாா். இந்தக் கடைக்கு வாடிக்கையாளா்போல திங்கள்கிழமை பிற்பகல் வந்த நபா், வெள்ளி நகைகள் வேண்டும் எனக் கேட்டுள்ளாா். கடை உரிமையாளரான ஸ்ரீஹரியும், கடை ஊழியா்களும் அவரிடம் பல்வேறு வடிவங்களில் உள்ள வெள்ளி கொழுசு உள்ளிட்ட நகைகளை வைத்துள்ளனா்.
ஊழியா்கள் அசந்த நேரத்தில், அந்த நபா் தான் கொண்டு வந்திருந்த பைக்குள் வெள்ளி நகைகளை எடுத்து போட்டுள்ளாா். இதைக் கவனித்த ஊழியா்கள், அந்த பையை சோதனை மேற்கொண்டபோது, 600 கிராம் வெள்ளி நகைகளைத் திருடி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை ஆா்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் ஊழியா்கள் ஒப்படைத்தனா்.
விசாரணையில், அவா் சரவணம்பட்டி அருகேயுள்ள கீரணத்தம் பகுதியைச் சோ்ந்த ராஜா (42) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா்.