முகப்பு
கோயம்புத்தூர்

வீட்டு மாடிகளில் காய்கறி வளர்க்கும் திட்டம்: கோவையில் 3000 பேருக்கு 50 சதவீத மானிய உதவி

சென்னை மற்றும் கோவை மாநகரங்களில் நச்சுத்தன்மையற்ற சத்தான காய்கறிகளை அவரவர் வீட்டு மாடியிலே உற்பத்தி செய்யும் திட்டத்திற்கான அரசாணை

Updated On : 9 அக்டோபர், 2013 at 12:35 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 11:39 PM

சென்னை மற்றும் கோவை மாநகரங்களில் நச்சுத்தன்மையற்ற சத்தான காய்கறிகளை அவரவர் வீட்டு மாடியிலே உற்பத்தி செய்யும் திட்டத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தென்மாநிலங்களைப் பொருத்தவரையில் கேரளம் மற்றும் ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் வீட்டு மொட்டை மாடிகளில் காய்கறிகளை அவரவர் வீட்டு மாடியிலே உற்பத்தி செய்ய அம்மாநில அரசுகள் போதிய ஊக்குவிப்பு செய்து வருகின்றன.

இதன்படி வீட்டு மொட்டை மாடிகள்,  திறந்தவெளி இடங்களில் சத்தான காய்கறிகளை உற்பத்தி செய்வதற்கு ஏதுவாக தமிழக அரசும் முன்முயற்சி எடுத்துள்ளது. கடந்த பட்ஜெட் தொடரின் போது இத்திட்டம் அறிவிக்கப்பட்டது.

Advertisement

அதன்படி சென்னை மற்றும் கோவை மாநகரங்களில் இத்திட்டத்தைச் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையும் செப்டம்பர் மாதம் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியது:

சென்னை மற்றும் கோவையில் வீட்டு மாடிகளில் காய்கறி உற்பத்தி செய்ய அரசு போதிய நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான அரசாணை தற்போது வெளியாகி உள்ளது.

நகர தோட்டக்கலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் இந்த புதிய முறையை அரசு அறிமுகம் செய்ய உள்ளது. இதில் ஊட்டம் ஏற்றிய தென்னை நார் கழிவுகள், தரமான நாற்றுகள், விதைகள் ஆகியவையும் வழங்கப்பட உள்ளது.

வீட்டு மாடியில் தக்காளி, வெண்டைக்காய், மிளகாய், முருங்கை உள்ளிட்டவைகளை உற்பத்தி செய்வதற்கு அரசு சார்பில் 50 சதவீத மானியம் அளிக்கும்.

இத்திட்டத்தில் முதல்கட்டமாக கோவை மாநகரத்தில் 3,000 பேர் வரை வீட்டு மாடியில் காய்கறி உற்பத்தி செய்ய பதிவு தோட்டக்கலை துறை உதவும். போதிய தொழில்நுட்பங்களையும், செயல்விளக்கங்களையும் அளிக்கும்.

வேப்ப எண்ணெய் உள்ளிட்ட இயற்கை உரங்களை தெளித்து நச்சுத்தன்மையில்லாத காய்கறிகளை உற்பத்தி செய்ய ஊக்குவிக்கப்படுவர்.

இதுபோன்ற திட்டத்தின் மூலம் சுற்றுச்சூழல் பெருகும். மாசு மருந்தில்லாத தரமான காய்கறிகளை உண்பதால் ஆரோக்கியமாக வாழ முடியும். காய்கறிகளை அவரவர் வளர்க்கும்போது அவர்களுக்குள்ளேயே மனதளவில் உற்சாக நிலை ஏற்படும். மன அமைதியும், பொழுது போக்கும் அவர்களுக்கு கிடைக்கும்.

இத்திட்டத்தில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் சென்னை மற்றும் கோவையில் உள்ள தோட்டக்கலை துறை அலுவலகங்களை நாடலாம். இந்த புதிய திட்டத்தை விரைவில் நடைமுறைக்கு கொண்டு வர போதிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.