முகப்பு
கோயம்புத்தூர்

மரப்பாலம் ரயில்வே மேம்பாலம் அகலப்படுத்தப்படுமா?

கோவை-பாலக்காடு சாலையில் குறுகலாக காணப்படும் மரப்பாலம் ரயில்வே மேம்பாலத்தால் அப்பகுதியில்

Updated On : 18 மார்ச், 2015 at 2:46 AM
பகிர்:

கோவை-பாலக்காடு சாலையில் குறுகலாக காணப்படும் மரப்பாலம் ரயில்வே மேம்பாலத்தால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

 ÷கோவையிலிருந்து சுமார் 12 கி.மீட்டர் தொலைவில் உள்ள இந்த மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு 40 ஆண்டுகளுக்கும் மேலாகிறது.

  இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கோவை-பாலக்காடு சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக இரு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

Advertisement

இதனிடையே, மரப்பாலம் ரயில்வே மேம்பாலம் மட்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் அகலப்படுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது.

 மேலும், இந்த மேம்பாலம் பாலக்காடு ரயில்வே கோட்ட எல்லைக்குள் வருவதால் பாலத்தை அகலப்படுத்த அனுமதி கிடைப்பது தாமதமாகிறது.

  இந்தப் பகுதியைச் சுற்றிலும் சுமார் 10-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் 15-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. நூற்றுக்கணக்கான மாணவர்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

  இந்த பாலத்தில் காலை மற்றும் மாலை வேளைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. சில சமயங்களில் நோயாளிகளை ஏற்றிவரும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் பாதிக்கப்படுகிறது.

 இதுகுறித்து மரப்பாலம் பகுதியைச் சேர்ந்த தனியார் வாகன ஓட்டுநர் முருகேசன் என்பவர் கூறுகையில், இந்த மேம்பாலம் நீண்ட நாள்களுக்கு முன்பாக கட்டப்பட்டது. அப்போது, இந்த சாலையில் வாகனப் போக்குவரத்து குறைவாகவே காணப்பட்டதால் போக்குவரத்து இடையூறு ஏற்படவில்லை.

 ஆனால், தற்போது நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள்

இந்த சாலையில் சென்று வருவதால் மரப்பாலம் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

 எனவே, இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப இந்தப் பாலத்தை அகலப்படுத்த வேண்டியது அவசியம். நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் ரெடிமேட் பில்லர்களைக் கொண்டு ரயில் போக்குவரத்தை நிறுத்தமாலேயே பாலத்தை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

 இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கோவைப்புதூர்-மதுக்கரை புறவழிச்சாலை வரை நான்கு வழிச்சாலையாக அமைக்க நிதி கேட்டு கருத்துரு அனுப்பட்டது.

 இந்நிலையில் மரப்பாலம் ரயில்வே பாலத்தை அகலப்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

  எனினும் சில மாதங்களில் பாலத்தை அகலப்படுத்த புதிதாக திட்ட அறிக்கை தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டால் பாலக்காடு ரயில்வே

கோட்டத்தின் அனுமதியுடன்  இந்த பாலத்தை அகலப்படுத்தும் பணி தொடங்கும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.