முகப்பு
கோயம்புத்தூர்

யானை துரத்தியதில் கீழே விழுந்து தம்பதி காயம்

யானை துரத்தியதில் கீழே விழுந்த தம்பதி ஞாயிற்றுக்கிழமை பலத்த காயமடைந்தனர்.

Updated On : 15 மே, 2018 at 3:53 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

யானை துரத்தியதில் கீழே விழுந்த தம்பதி ஞாயிற்றுக்கிழமை பலத்த காயமடைந்தனர்.
கோவை மாவட்டம், சிறுமுகையை அடுத்த அம்மன்புதூரைச் சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மனைவி பேபி. இருவரும் விவசாயக் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், இருவரும் வேலைக்கு செல்வதற்காக ஞாயிற்றுக்கிழமை காலையில் சிறுமுகை வனச்சரகத்துக்கு உள்பட்ட பெத்திகுட்டை காப்புக்காடு வனப்பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அவர்கள் அம்மன்புதூர் அருகே வந்தபோது அங்கிருந்த புதரில் இருந்து பிளிறியபடி வெளியே வந்த யானை அவர்களைத் துரத்தியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கருப்புசாமி, யானையிடமிருந்து தப்பிக்க தனது வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்றார். அப்போது நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர்.
இதற்கிடையே அந்த யானையும், அருகிலிருந்த வனப் பகுதிக்குள் சென்றுவிட்டது. காயமடைந்த இருவரையும் அந்த வனப் பகுதி வழியே சென்றவர்கள் மீட்டு சிறுமுகையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து சிறுமுகை வனத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து வனத் துறையினர் கூறியதாவது: பவானிசாகர் அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் வண்டல் மண் எடுக்கும் பணி நடைபெற்று வருவதால், அங்கு இரைச்சலுடன் இயங்கி வரும் பெரிய, பெரிய வாகனங்களால் ஆற்றில் தண்ணீர் அருந்த வரும் யானைகள் மிகவும் பாதிக்கப்படுகின்றன. இதனால் அவை வனப் பகுதியிலிருந்து அருகில் உள்ள குடியிருப்பு மற்றும் விளை நிலங்களில் நுழைந்து விடும் நிலை உருவாகி உள்ளது. இதைக் கருத்தில்கொண்டு வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு வண்டல் மண் எடுக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.